அறிவியல்பூர்வமாக வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் மூடநம்பிக்கைகளை வளர்த்து கொண்டு செயல்பட வேண்டாம்: தயாநிதி மாறன் எம்பி பேட்டி

சென்னை: அறிவியல் பூர்வமாக வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், மூட நம்பிக்கைகளை வளர்த்து கொண்டு செயல்பட வேண்டாம் என தயாநிதி மாறன் எம்பி கூறினார். காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டை உள்ள நட்சத்திர ஓட்டலில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழு துணை தலைவருமான தயாநிதி மாறன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி பேசினார்.

கூட்டத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், மண்டல அளவில் பங்கேற்ற அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினர்.  இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அணியின் செயலாளரும், நாடாளுமன்ற குழு துணை தலைவருமான தயாநிதி மாறன் எம்பி கூறுகையில், ‘விளையாட்டு மேம்பாட்டு அணி ஆரம்பித்து 20 மாதங்களில் தமிழகம் முழுவதும் சுமார் 180 விளையாட்டு போட்டிகளை நடத்தியுள்ளோம்.

அதிகளவில் கபடி, கிரிக்கெட் மற்றும் நீச்சல் போட்டிகளை நடத்தியுள்ளோம். அதிலும், சிறப்பாக ரோபோ போட்டியும் நடத்தியுள்ளோம். மேலும், வருகின்ற ஆண்டுகளில் ஒரு மாதத்திற்கு சுமார் 20 போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். அறிவியல் பூர்வமாக வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் மூட நம்பிக்கைகளை வளர்த்து கொண்டு செயல்பட வேண்டாம்’ என்றார். பேட்டியின்போது, மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன், விளையாட்டு அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post அறிவியல்பூர்வமாக வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் மூடநம்பிக்கைகளை வளர்த்து கொண்டு செயல்பட வேண்டாம்: தயாநிதி மாறன் எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: