ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு பிரிவினைப்போக்குக்கு பலியாகிவிடக்கூடாது

சென்னை: தமிழ்நாடு ஹிந்தி சாகித்ய அகாடமி, சென்னை அரும்பாக்கம் டிஜி வைஸ்ணவா கல்லூரி சார்பில் தேசிய கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா அக்கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்மொழி மிகவும் பழமையான மொழி. தமிழில் பேச வேண்டும் என்பது எனது ஆசை. என்னால் தமிழை வாசிக்க முடியும். மற்றவர்கள் தமிழில் பேசினால் அதை புரிந்துகொள்ள முடியும். ஆனால், தமிழில் பேசுவதுதான் மிகவும் சிரமமாக உள்ளது. பழமையும், சிறப்பும் வாய்ந்த தமிழ் மொழியை உலக அளவில் கொண்டு செல்ல பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்றைய தினம் ஒட்டுமொத்த உலகின் பார்வையின் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. இந்தியாவை ஒரு பொருட்டாக எண்ணாத நாடுகள் தற்போது இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தியா மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கையும் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழை மக்கள் வறுமை கோட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். தற்போது உலக அளவில் எங்கு பார்த்தாலும் போர்ச்சூழல் நிலவுகிறது. ஆனால், இந்தியா எப்போதும் அமைதியை விரும்பக்கூடிய நாடாகவே இருந்து வருகிறது.

உலகில் ஒருபுறம் சில நாடுகளில் செல்வம், பொருளாதார வளமும் மிதமிஞ்சி காணப்படுகிறது. ஆனால், அதேநேரத்தில் சில நாடுகளில் பசியும், பட்டினியும் நிலவுகிறது. இது நீடித்த வளர்ச்சி மிக்க உலகமாக இருக்க முடியும். கொரோனா தொற்று காலத்தில் உலக நாடுகளுக்கு தடுப்பூசியை இலவசமாக வாரி வழங்கிய நாடு இந்தியா. உதவும் குணம் என்பது இந்திய நாட்டின் மரபணுவில் இருக்கிறது. இந்திய தேசத்தை சிலர் இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் துண்டாட நினைக்கிறார்கள். இத்தகைய பிரிவினை போக்குக்கு மாணவர்கள் ஒருபோதும் பலியாகிவிடக்கூடாது. வாழ்க தமிழ், வாழ்க இந்தி, வாழ்க பாரதம். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு பிரிவினைப்போக்குக்கு பலியாகிவிடக்கூடாது appeared first on Dinakaran.

Related Stories: