இதில், மாதவரம் சிறுசேரி சிப்காட் வரையிலான 3வது வழித்தடத்தில் 19 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி பணிமனை வரையிலான 4வது வழித்தடத்தில் 18 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 9 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான 5வது வழித்தடத்தில் 39 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைய உள்ளன. 3வது வழித்தடத்தில், மாதவரம் பால்பண்ணை-கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம், 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, புரசைவாக்கத்தில் இருந்து கெல்லீஸ் நோக்கி மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி இந்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: புரசைவாக்கத்தில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சுரங்கப்பாதை தோண்டும் பணி இந்த மாதம் தொடங்க உள்ளது. புரசைவாக்கம் பகுதியில் மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் கடைகள் அதிகமாக இருப்பதால் மிகவும் கவனத்துடன் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறோம். சுரங்கம் தோண்டும் இடத்தில் மணல்தன்மை எளிதில் இருப்பதால் பணிகள் முடிப்பதில் எந்த ஒரு சிரமமும் இருக்காது. புரசைவாக்கத்தில் இருந்து கெல்லீஸ் நோக்கி 300 மீட்டர் சுரங்கப்பாதை 6 மாதத்திற்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பெரம்பூர் பேரக்ஸ் சாலை முதல் புரசைவாக்கம் வரை சுரங்கம் தோண்டும் பணியும் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post புரசைவாக்கம்- கெல்லீஸ் வரையிலான சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடக்கம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.