காஷ்மீர் பேரவை தேர்தல் மேலும் 2 தலைவர்கள் பா.ஜவுக்கு முழுக்கு: தொண்டர்கள் கண்டன பேரணி

ஜம்மு: காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் சீட் கிடைக்காததால் மேலும் 2 பாஜ தலைவர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் இந்தமாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி என 3 கட்டங்களாக நடக்கிறது. பாஜவின் முதல் வேட்பாளர் பட்டியல் கடந்த 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஜம்முவின் பல மாவட்டங்களில் வேட்பாளர்களுக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

சம்ப் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ராஜிவ் சர்மா நிறுத்தப்பட்டதற்கு எதிராக கட்சி தொண்டர்கள் நேற்று பேரணி நடத்தினர். ராம்பன்,பாடேர்-நாக்சேனி தொகுதிகளில் கட்சி அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக 2 பேர் சுயேச்சையாக மனுதாக்கல் செய்துள்ளனர்.  சம்பா தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சுர்ஜித் சிங் ஸ்லாத்தியா என்பவரை கட்சி நிறுத்தியுள்ளது. தேசிய மாநாட்டு கட்சியில் இருந்த சுர்ஜித் சிங் கடந்த 2021ல் பாஜவில் சேர்ந்தார்.

அவருக்கு சீட் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பா மாவட்ட தலைவர் காஷ்மீர் சிங் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக மாநில பாஜ தலைவர் ரவீந்தர் ரெய்னாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஜம்மு கிழக்கு தொகுதியில் யுத்வீர் சேத்தியை நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு மாவட்ட பாஜ இளைஞரணி தலைவர் கானவ் சர்மா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜம்மு வடக்கு,ஜம்மு கிழக்கு, ராம்பன், ஸ்ரீமாதா வைஷ்ணவி தேவி,சம்ப், அக்னோர் தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு எதிராக தொண்டர்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் நேற்று கண்டன பேரணி நடத்தினார்கள்.

* ராணுவம் திடீர் ஆய்வு
ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தலையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு தயார் நிலைகள் குறித்து ராணுவ அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். செனாப் பள்ளத்தாக்கின் தோடா, கிஷ்த்வார் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு தயார் நிலையை ராணுவ அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். மேலும் மூன்றுநாள் கைலாஷ் குந்த் யாத்திரை தொடங்கியுள்ள நிலையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உயரமான மலை பாதைகள் முழுவதும் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

The post காஷ்மீர் பேரவை தேர்தல் மேலும் 2 தலைவர்கள் பா.ஜவுக்கு முழுக்கு: தொண்டர்கள் கண்டன பேரணி appeared first on Dinakaran.

Related Stories: