பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டி பதக்க வேட்டையை தொடங்கியது இந்தியா: தங்கம் வென்றார் அவனி; ஒரே நாளில் 4 பதக்கம்

பாரிஸ்: மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியா நேற்று ஒரே நாளில் 4 பதக்கங்களை அள்ளியது. துப்பாக்கிசுடுதல் வீராங்கனை அவனி லெகரா தொடர்ந்து 2வது முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வரும் இந்த தொடரின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் (எஸ்எச்1) பிரிவில் பங்கேற்ற அவனி லெகரா (22 வயது) 249.7 புள்ளிகள் குவித்து புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார். இவர் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது (249.6 புள்ளி). இதன் மூலம் பாராலிம்பிக்கில் தொடர்ச்சியாக 2 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அவனி வசமானது.

தென் கொரியாவின் லீ யுன்ரி (246.8 புள்ளி) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் (228.7) வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார். பாராலிம்பிக் துப்பாக்கிசுடுதல் வரலாற்றில், ஒரே பிரிவில் இந்தியா 2 பதக்கங்கள் வெல்வது இதுவே முதல் முறையாகும். மணிஷுக்கு வெள்ளி: ஆண்கள் 10 மீ. ஏர் பிஸ்டல் எஸ்எச்1 பைனலில் களமிறங்கிய இந்திய வீரர் மணிஷ் நர்வால் 234.9 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். தென் கொரியாவின் ஜோ ஜியாங்டு (237.4) தங்கம், சீனாவின் யாங் சவோ (214.3) வெண்கலம் வென்றனர். மணிஷ் நர்வால் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். பாராலிம்பிக்கில் தொடர்ச்சியாக 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை நர்வாலுக்கு கிடைத்துள்ளது.

பிரீத்தி அசத்தல்: மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் (டி35) இந்திய வீராங்கனை பிரீத்தி பால் (23 வயது) 14.21 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். இந்த போட்டியில் முதல் 2 இடங்களைப் பிடித்த சீனாவின் ஸோ ஜியா (13.58 விநாடி) தங்கப் பதக்கமும், குவோ கியான்கியான் (13.74 விநாடி) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். அவனி வென்ற தங்கப் பதக்கத்துடன் பாரிஸ் பாராலிம்பிக் பதக்க வேட்டையை தொடங்கிய இந்தியா, ஒரே நாளில் 4 பதக்கங்களை கைப்பற்றி டாப்-10ல் இடம் பிடித்துள்ளது.

The post பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டி பதக்க வேட்டையை தொடங்கியது இந்தியா: தங்கம் வென்றார் அவனி; ஒரே நாளில் 4 பதக்கம் appeared first on Dinakaran.

Related Stories: