பார்முலா-4 கார் பந்தயத்திற்கு வரும் பார்வையாளர்கள் தண்ணீர் பாட்டில், பட்டாசு எடுத்து வர தடை: தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னையில் இன்றும், நாளையும் நடைபெறும் கார் பந்தயத்துக்கு வரும் பார்வையாளர்கள் தண்ணீர் பாட்டில், பட்டாசுகள் உள்ளிட்டவை எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை பார்முலா -4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் இன்றும், நாளையும் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயத்தை நடத்த உள்ளது. தெற்காசியாவிலேயே இரவு நேர பார்முலா -4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. இன்று நடைபெறும் பந்தயத்தில் மதியம் 2.30 மணிக்கு பயிற்சி சுற்று நடைபெறும்.

அதனை தொடர்ந்து சாகச நிகழ்ச்சி மற்றும் தகுதி சுற்று நடைபெறும். நாளை நடைபெறும் பந்தயம் மதியம் 2.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். இதற்கிடையில் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறும். கார் பந்தயம் பார்க்க வருபவர்கள் தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தப் பொருளும் அரங்கிற்குள் எடுத்து வரக்கூடாது. மேலும், அவை அனைத்தும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்பட்டு திரும்ப தரப்பட மாட்டாது. புகையிலை பொருட்கள், தீப்பெட்டிகள், பட்டாசுகள், எளிதில் எரியக்கூடிய திரவங்கள், மதுபானம், பிளேடுகள், கத்திகள், கத்திரிக்கோல், ஆயுதங்கள், பெப்பர் ஸ்பிரே, பெரிய சங்கிலிகள், எந்த வகையான திரவங்களுடனும் உள்ள பாட்டில்கள், துப்பாக்கிகள், சுவிஸ் ராணுவ கத்திகள், லேசர் லைட்டுகள், லைட்டர்கள், மின்-சிகரெட் அண்டு வேப்ஸ் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.

ஒலி அமைப்புகள் – ஏர் ஹார்ன்கள், விசில் போன்ற சத்தம் எழுப்பக்கூடிய பொருட்கள், மெகாபோன்கள், இசைக்கருவிகள், போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் பயன்படுத்த கூடாது. போதைப்பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் விதிமீறல் தெரிந்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவீர்கள். கூடாரங்கள், ஸ்லீப்பிங் பேக்ஸ், குடைகள் அல்லது நிழல் கட்டமைப்புகள் போன்றவை அனுமதி இல்லை. வெளிப்புற உணவு மற்றும் பானங்கள் அனுமதிக்கப்படாது. தண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், சீல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், திறந்த தண்ணீர் பாட்டில்கள், டின்கள், கேன்கள் அனுமதி இல்லை.

டிரோன்கள் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பறக்கும் சாதனத்துக்கு அனுமதி இல்லை. தண்ணீர் பலூன்கள், முட்டை, பிளாஸ்டிக் பாட்டில் மூடிகள், இழிவு அடையாளங்கள் அல்லது பதாகைகள் – ஜாதி, மதம், பாலினம், மதம் மற்றும் இனத்திற்கு எதிரான புண்படுத்தும் பதாகைகள் அல்லது தவறான பாரபட்சமான மொழி ஆகியவை பயன்படுத்த கூடாது. மற்றவை – ஸ்பிரே பெயின்ட்ஸ், ஃபேண்டம் ஸ்டிக் லைட்ஸ், ஹாம்மோக்ஸ், டோடெம்ஸ் போன்றவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பார்முலா-4 கார் பந்தயத்திற்கு வரும் பார்வையாளர்கள் தண்ணீர் பாட்டில், பட்டாசு எடுத்து வர தடை: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: