நோக்கியா, Paypal, ஈல்டு என்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

வாஷிங்டன்: அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் சென்றடைந்தார். இந்த பயணத்தின்போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களை சந்திக்கிறார்.

இதனிடையே சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. செமி கண்டக்டர் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மையத்தை சென்னையில் அமைக்கிறது அமெரிக்காவின் Applied Materials நிறுவனம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகளுடன் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி மையமாக இந்த மையம் இருக்கும். சென்னை தரமணியில் அமைய உள்ள மையம் மூலம் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சென்னை அடுத்த சிறுசேரியில் ஆராய்ச்சி மையம் அமைக்க நோக்கியா நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ரூ.450 கோடி நோக்கியா நிறுவனம் முதலீடு செய்வதன் மூலம் 100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். Paypal நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு கையெழுத்தாகியுள்ளது. Paypal நிறுவன முதலீட்டின் மூலம் 1000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஈல்டு என்ஜினியரிங் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கோவை சூலூரில் செமி கண்டக்டர் உபகரண ஆலை அமைக்கிறது ஈல்டு என்ஜினியரிங் நிறுவனம். கோவை சூலூரில் ரூ.150 கோடியில் அமையும் ஆலை மூலம் 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மைக்ரோ சிப் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னை செம்மஞ்சேரியில் ரூ.250 கோடி முதலீடு செய்கிறது மைக்ரோ சிப் நிறுவனம் – 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அமெரிக்காவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்பின்க்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ரூ.50 கோடியில் மதுரை எல்காட் வடபழஞ்சியில் இன்பின்க்ஸ் நிறுவனம் புதிய தொழில்நுட்ப மையத்தை அமைக்கிறது. மதுரை வடபழஞ்சியில் அமையவுள்ள இன்பின்க்ஸ் தொழில்நுட்ப மையம் மூலம் 700 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

 

The post நோக்கியா, Paypal, ஈல்டு என்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: