வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்ய 2 வருவாய் கிராமங்கள் இணைப்பு: சர்க்கரை ஆலை செயலாட்சியர் தகவல்

திருவலம், ஆக.29: வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ணை செய்ய 2 வருவாய் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக சர்க்கரை ஆலை செயலாட்சியர் தெரிவித்துள்ளார்.

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் செயலாட்சியர் கே.நர்மதா தெரிவித்ததாவது:
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த ஆரிமுத்து மோட்டூர் ஊராட்சிக்குட்பட்ட அம்முண்டி கிராமத்தில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக சர்க்கரை துறை இயக்குனரின் உத்தரவுபடி ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா பனப்பாக்கம் பிர்க்காவில் உள்ள ஒரு சில வருவாய் கிராமங்களை வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையுடன் இணைக்க ஆணை பிறப்பித்துள்ளார்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் இயங்கி வந்த தனியார் சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதிகளை பிரித்து ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவிற்குட்பட்ட சங்கரன்பாடி, களத்தூர், பெரும்புலிபாக்கம், அவலூர், பொய்கைநல்லூர், மகேந்திரவாடி, கோடம்பாக்கம், பெரப்பேரி போன்ற வருவாய் கிராமங்கள் தற்காலிகமாக வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சர்க்கரைத் துறை இயக்குனரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, கரும்பு விவசாயிகள் 2024-25ம் ஆண்டு நடவுப்பருவத்திற்கு கரும்பினை நடவு செய்திடவும், தற்போது அரசு அறிவித்துள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்படி ஒருகரணை நடவு விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு ₹3750 மானியம் மற்றும் மறு சீவல் நாற்று நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு 50 சதவீதம் ₹12,500 மானியமாக வழங்கப்படுகிறது. கரும்பு பயிரில் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100சதவீதம் மானியம், பெரு விவசாயிகளுக்கு 75சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் ஆலையில் கரும்பு அறுவடை செய்வதற்கு பயன்படுத்த 5 கரும்பு அறுவடை இயந்திரங்கள் தயாராக உள்ளது. கரும்பு நடவு செய்யும்போது 4.5 அடி இடைவெளியில் அகலமாக அமைப்பு ஒத்த வரிசையில் கரும்பு நடவு செய்யவும், கரும்பு நடவு செய்த மூன்று மாதத்தில் மண் அணைக்கவும், 5 முதல் 7வது மாதத்தில் சோகை உரித்து விட்டம் கட்டவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் காவேரிப்பாக்கம் கோட்ட அலுவலர் டி.பூவேந்திரபாபு என்பவரை நேரில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்ய 2 வருவாய் கிராமங்கள் இணைப்பு: சர்க்கரை ஆலை செயலாட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: