நான்கு சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பித்தல் அறிமுகம்; மேயர் பிரியா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, ஆக.29: சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேயர் பிரியா, பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் லிஸ் தால்போட் பாரே முன்னிலையில் கையெழுத்தானது. சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் பிரான்சைஸ் ஆப் மெட்ராஸ் சார்பில் சென்னை பள்ளியில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேயர் பிரியா, பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் லிஸ் தால்போட் பாரே முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த திட்டம், முதற்கட்டமாக மார்க்கெட் தெரு சென்னை மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் பட்டேல் நகர் சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் தலா 20 மாணவர்கள் என 4 பிரிவுகளுக்கு விருப்பப் பாடமாக பிரெஞ்சு மொழி கற்றல் வகுப்புகள் முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட உள்ளது. மாணவர்கள் ஜூனியர் லெவல் ஏ2 வரை கற்பதே இதன் நோக்கமாகும். இது சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் பிரான்சைஸ் ஆப் மெட்ராஸ் இடையிலான கலாச்சாரம் மற்றும் கல்வி வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமையும். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் (கல்வி) ஜெ.விஜயா ராணி, நிலைக்குழுத் தலைவர் (கல்வி) விசுவநாதன், உதவி துணைத் தூதர் கிறிஸ்டோப் பிரமொல்லே, அலையன்ஸ் ப்ரான்செய்ஸ் ஆப் மெட்ராஸ் இயக்குநர் பாட்ரிசியா தெரி ஹார்ட், இந்தியாவில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்தின் பிரெஞ்சு மொழி ஆலோசகர் தாமஸ் சாமொன்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நான்கு சென்னை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பித்தல் அறிமுகம்; மேயர் பிரியா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: