சென்னை, செப்.10: திருத்தணி முருகன் கோயிலில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் நேற்று சாமி தரிசனம் செய்தார். வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் திருத்தணி முருகபெருமானை தரிசனம் செய்ய திருப்பதியில் இருந்து தனி ஹெலிகாப்டரில் நேற்று திருத்தணிக்கு வந்தார். தனியார் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய ரவிசங்கர், அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் கார் மூலம் திருத்தணி மலைக்கோயிலுக்கு வந்தடைந்தார்.
அங்கு அவரை கோயில் அறங்காவல்குழு தலைவர் சு.ஸ்ரீதரன், கோயில் இணை ஆணையர் ரமணி ஆகியோர் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் முருகப்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜையில் பங்கேற்ற ரவிசங்கர், பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். இதனை தொடர்ந்து ஆபத்சகாய விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை சமேத உற்சவரை தரிசித்து வழிபட்டார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் மலர்மாலை அணிவித்து, கோயில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து காரில் கல்லூரி மைதானம் சென்றடைந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.
The post திருத்தணி முருகன் கோயிலில் வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம் appeared first on Dinakaran.