ஒரு கிலோ நகை திருடியதாக கூறி அறையில் பூட்டி சரமாரி தாக்கியதால் நகை பட்டறை ஊழியர் தற்கொலை:  உரிமையாளர் உள்பட 4 பேர் கைது  சவுகார்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை, செப்.12: வாடிக்கையாளர்கள் கொடுக்கும் நகையில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கிலோ 100 கிராம் நகையை திருடி விற்றதாக, நகை பட்டறை ஊழியரை உரிமையாளர் மற்றும் சக ஊழியர்கள் அறையில் பூட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக யானைகவுனி போலீசார் வழக்குப் பதிவு செய்து பட்டறை உரிமையாளர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் சாய்பாலி ரபிக் காஸி (30). சவுகார்பேட்டை அனுமந்த நாராயணன் கோயில் தெருவில் உள்ள நகைப் பட்டறையில் 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நகைப்பட்டறையின் மேலே உள்ள அறையில் ரபிக் காஸி (30), தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதாக பட்டறை உரிமையாளர் பாலாஜி நேற்று முன்தினம் யானைகவுனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரபிக் காஸியின் சடலத்தை பார்த்த போது, சிறு சிறு காயங்கள் இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பட்டறை உரிமையாளர் பாலாஜி (29), பட்டறை ஊழியர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த வைபவ் சாகிப் (29), ராகேஷ் மாலி (29), மனோஜ் மாலி (31) ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வாடிக்கையாளர்கள் கொடுக்கும் தங்க நகையில் ரபிக் சிறிது திருடி வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக செம்பை கலந்து கொடுத்துள்ளார். வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்று பார்த்துவிட்டு நகையின் தரம் குறைவதாக பட்டறை உரிமையாளர் பாலாஜியிடம் புகார் தெரிவித்துள்ளனர். அடிக்கடி புகார்கள் வந்ததால் பாலாஜி, நகைப்பட்டறை ஊழியர்களிடம் நடத்திய விசாரித்ததில், ரபிக் காஸிதான் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் நகையில் சிறிது சிறிதாக திருடியது தெரிய வந்தது.

அந்த வகையில் ஒரு கிலோ 100 கிராம் வரை திருடி ரபிக் காஸி விற்று அந்த பணத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. நீ செய்த மோசடியால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. வியாபாரிகள் மத்தியிலும் கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது எனக்கூறி ரபிக் காஸியை பாலாஜி தாக்கியுள்ளார். சக ஊழியர்களும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். திருடிய நகையை ஒரு மாதத்துக்குள் திருப்பி தர வேண்டும் எனவும் பாலாஜி பாபர் மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து, மனம் உடைந்த ரபிக் காஸி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. எனவே, தற்காலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை பட்டறை உரிமையாளர் பாலாஜி மற்றும் ஊழியர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர். பிறகு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் சவுகார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஒரு கிலோ நகை திருடியதாக கூறி அறையில் பூட்டி சரமாரி தாக்கியதால் நகை பட்டறை ஊழியர் தற்கொலை:  உரிமையாளர் உள்பட 4 பேர் கைது  சவுகார்பேட்டையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: