அடையாள அட்டையை ஷூவால் மிதித்து அட்டகாசம் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்ட 5 கல்லூரி மாணவர்கள் கைது: ஆயிரம்விளக்கு போலீஸ் நடவடிக்கை

சென்னை, செப்.12: நந்தனம் கல்லூரி மாணவர்களின் அடையாள அட்டையை ஷூவால் மிதித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளிட்ட புதுக் கல்லூரி மாணவர்கள் 5 பேரை ஆயிரம்விளக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் ரூட் தல பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண், பொது இடங்களில் பிரச்னையில் ஈடுபடும் மாணவர்களை கண்காணித்து அவர்களின் வீடுகளுக்கு சென்று பெற்றோர் முன்னிலையில் மாணவர்களின் தவறை சுட்டிக்காட்டி விழிப்புணர்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் சென்னை அண்ணா சாலை ஆனந்த் தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே மற்றும் ஸ்பென்சர் சிக்னல் அருகே நந்தனம் கல்லூரி மாணவர்கள் மற்றும் ராயப்ேபட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் சிலர் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நந்தனம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் போலீசார் மோதல் தொடர்பாக விசாரணை நடத்திய போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. ராயப்பேட்டை புதுக்கல்லூரி மாணவர்கள் செல்லும் பேருந்தில், நந்தனம் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது புதுக் கல்லூரி மாணவர்கள் \”இது எங்கள் ரூட் நீங்கள் எப்படி வரலாம்\” என்று கூறி நந்தனம் கல்லூரி மாணவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அதோடு இல்லாமல் நந்தனம் கல்லூரி மாணவர்கள் அணிந்து இருந்த ‘கல்லூரியில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை’ புதுக் கல்லூரி மாணவர்கள் பறித்து ‘ஷூவால் மிதித்தப்படி, புது கல்லூரிக்கு ஜே’ என கோஷம் எழுப்பியுள்ளனர்.

அதை சக மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதோடு இல்லாமல் அந்த வீடியோவை புதுகல்லூரி மாணவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ரீல்ஸ்’ வீடியோவாக பதிவு செய்து எச்சரித்து இருந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் சம்பந்தப்பட்ட இரண்டு கல்லூரி முதல்வர்களிடம் தவறு செய்த மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

The post அடையாள அட்டையை ஷூவால் மிதித்து அட்டகாசம் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்ட 5 கல்லூரி மாணவர்கள் கைது: ஆயிரம்விளக்கு போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: