கடைசி எலும்பும் கடுமையான வலியும்!

நன்றி குங்குமம் தோழி

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றபோது ஆசிரியராக பணிபுரியும் ஒரு உறவினர், ‘தனக்கு உட்காரும் இடத்தில் கடுமையான வலி இருப்பதாகக்’ கூறி வேதனைப்பட்டார். என்னவென்று சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு ‘காக்சிடைனியா’ பிரச்னை இருப்பதும், அது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் நீண்டநாள் அவதியுறுவதையும் கண்டேன். அவர் மட்டும் அல்ல… நம்மில் பலர் இவ்வகை தாங்க முடியாத வலியினால் பல நாள் தீர்வும், தெளிவும் இன்றி அவதிக்கு உள்ளாகியிருப்போம். அதற்காகவே காக்சிடைனியா பற்றிய விழிப்புணர்வு கட்டுரையை இங்கே எழுதுகிறேன்.

காக்சிடைனியா…

‘Coccydynia’ என்று மருத்துவத்தில் அழைக்கப்படும் இந்த எலும்பு பிரச்னையானது, நாம் அமரும்போது கடைசி எலும்பான அதாவது, இரண்டு புட்டத்திற்கும் நடுவே முடியும் காக்சிஸ் எனப்படும் எலும்பில் வலி தோன்றுவதே ஆகும்.இதனால் உறுதியான தரையில் அமர்ந்தால் ‘வின்’ என வலி உண்டாகும். சொகுசு இருக்கைகளில் (அதாவது, குஷன் வைத்த இருக்கைகளில்) அமர்ந்தாலும் வலி உண்டாகுவதை உணரலாம்.

எலும்புகளின் அமைப்பு…

மூளையின் தொடர்ச்சியாக முதுகுத் தண்டுவடம் கீழே வடம் போல நீண்டு வந்து இடுப்புப் பகுதியில் முடியும். மண்டை ஓடு எப்படி மூளையை பாதுகாக்கிறதோ அதேபோல முதுகுத் தண்டுவடத்தை பாதுகாக்க சிறு எலும்புகள் ஒன்றன் பின் ஒன்றாய் கீழ் நோக்கி சென்று இடுப்புக் கூட்டோடு முடியும்.இதில் 7 கழுத்துப் பகுதி எலும்புகள், 12 முதுகுப் பகுதி எலும்புகள், 5 இடுப்புப் பகுதி எலும்புகள் என ஒன்றின் கீழ் ஒன்று வரும். இதன் பின் 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று ஒட்டியது போல சேர்ந்து புட்டங்கள் இரண்டிற்கு நடுவே அமையும். இதன் பெயர் ‘சாகரம்’ என்பர். கடைசியாக 3 – 5 காக்சிஸ் எலும்புகள் ஒன்றாய் சேர்ந்து ‘தலை கீழான முக்கோண வடிவில்’ முடியும்.

கடைசியான அந்த கூரிய முனையில் வலி தோன்றுவதே காக்சிடைனியா என்கிறோம். இதனோடு சில தசைகளும், தசை நார்களும், ஜவ்வுகளும் இணைந்திருக்கும். இந்த எலும்பினை ஆங்கிலத்தில் ‘டெயில் போன்’ (Tail Bone) எனக் கூறுவர். இந்த எலும்பில் இருந்துதான் விலங்குகளுக்கு வால் உருவாகும்.கடைசி வால் எலும்பான காக்சிஸ் எலும்பு உட்பட முதுகுத் தண்டுவடத்தில் உள்ள 33 எலும்புகளின் பயன் எடையை தாங்குவது ஆகும். முக்கியமாக காக்சிஸ் எலும்புகள் நாம் உறுதியாய் அமருவதற்காக உடல் எடையை புவியீர்ப்பு விசைக்கு ஏற்றவாறு தாங்கி நிற்கும்.

காரணங்கள்…

* அதிக நேரம் கூன் விழுந்த முதுகாய் அமரும்போது நாம் நம்மை அறியாமல் இடுப்புக் கூட்டின் எலும்புகள் மீது இல்லாமல் காக்சிஸ் எலும்பின் மேல் எடையை கொடுக்கிறோம்.

* காக்சிஸ் எலும்பினை சுற்றி உள்ள தசைகள் பலவீனமாய் இருப்பதால், எலும்புக்கு அதிக அழுத்தம் செல்கிறது. இப்படி தொடர்ந்து அழுத்தம் விழுவதால் வலி உண்டாகும்.

* சிலர் விழும்போது உட்கார்ந்தவாறு விழுந்துவிடுவர். அதிலும் எலும்புக்கு காயம் ஏற்பட்டு வலியுண்டாகும்.

* உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு அதிக எடையை காக்சிஸ் எலும்பினால் சுமக்க முடியாது. எனவே, வலி உருவாகும்.

* அதிக நேரம் அமர்ந்திருப்பதும், அதுவும் உறுதியான தரையில் அமர்வதும். உதாரணமாக, டைல்ஸ், உறுதியான நாற்காலி, இருக்கைகள் என நீண்ட நேரம் அமர்ந்திருப்பது.

அறிகுறிகள்…

* உட்கார்ந்த நிலையிலிருந்து எழும்போது வால் எலும்பில் அதீத வலியை உணர முடியும்.

* மலம் கழிக்கும் போது வலி உண்டாகும்.

* சம்மணமிட்டு அமரும் போது அதிக வலியும், கால்களை நீட்டி அமரும் போது குறைவான வலியும் உணர்வர்.

தரவுகள் தரும் தகவல்கள்…

* உடற்பயிற்சி செய்யாத கர்ப்பிணிகள் கடைசி மூன்று மாதத்தில் ஒரு முறையாவது இந்த காக்சிடைனியா பிரச்னையால் அவதியுறுகின்றனர்.

* ஆண்களை விட பெண்களையே ஐந்து மடங்கு அதிகமாக இப்பிரச்னை வெகுவாக பாதிக்கிறது.

* 31 சதவிகிதம் இப்பிரச்னை ஏன் வருகிறது எனக் காரணம் கண்டறியப்படவில்லை.

ஆபத்துக் காரணிகள்…

* மிகவும் ஒல்லியாக இருப்பவருக்கு கொழுப்பின் அளவும், தசை அடர்த்தியின் அளவும் குறைவாக இருக்கும் என்பதால், அவர்களின் உடல் எடை நேரே எலும்புகளில்தான் விழும். மிருதுவாக குஷன் போன்று தாங்க தசையும் கொழுப்பு படலமும் இல்லாமல் இருக்கும் என்பதால் இவர்களுக்கு எளிதில் வலி வரலாம்.

* அதீத உடற்பருமனோடு இருப்பவர்களுக்கு அந்த எடையை தொடர்ந்து தாங்க போதுமான பலம் காக்சிஸ் எலும்புகளில் இருக்காது. அதனால் வலி வரலாம்.

* அதிக நேரம் உட்காரும் நபர்களுக்கு எளிதில் வரலாம். உதாரணமாக, ஆசிரியர், ஓட்டுநர், ஐடி ஊழியர், கல்லூரி மாணவ, மாணவியர்கள்.

* உறுதியான இருக்கைகளில் அதிக நேரம் அமர வேண்டிய சூழல் தினசரி வந்தால் அவர்களுக்கு வலி வரலாம். உதாரணமாக, நம் ஊர் ரயில் வண்டி இருக்கைகள் வலிமையாக இருக்கும் என்பதால், தினசரி இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயணம் செய்பவருக்கு கட்டாயம் இந்த வலி வரலாம்.

* படகு ஓட்டுவோருக்கு, அதிக நேரம் மிதிவண்டி ஓட்டுவோருக்கு முன் பின் தொடர்ந்து உடலினை அசைக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு இந்த வலி வரலாம். இவை இரண்டில் விளையாட்டு வீரராக இருப்பவர்களுக்கு காக்சிடைனியா வரும் வாய்ப்பு அதிகம்.

* கர்ப்பிணி பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் பிரசவத்திற்கு இலகுவாக இருக்க ‘ரிலக்சின்’ (Relaxin) எனும் ஹார்மோன் சுரக்கும். இதனால் வால் எலும்பு இலகுவாக மாறுவதால் வலி உண்டாகலாம். மேலும் வயிற்றில் எடை அதிகரிக்கும். கடைசி மூன்று மாதங்களில் வலி வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

கண்டறிய…

இதற்கென பிரத்யேக பரிசோதனைகள் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருப்பதை நன்கு ஒருவரால் உணர முடியும் என்பதாலும், மேலும் அங்கு வலி வர வேறு எதுவும் காரணம் பெரும்பாலும் இருக்காது என்பதாலும், இது காக்சிடைனியா என வீட்டிலேயே நாமே உறுதி செய்து கொள்ளலாம். பின் இயன்முறை மருத்துவரை அணுகலாம்.

தீர்வுகள்…

அதிகம் வலி இருந்தால் எலும்பு மூட்டு மருத்துவர் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் மருந்து, மாத்திரைகளை வழங்குவர். ஆனால், அது நிரந்தர தீர்வு இல்லை மற்றும் பக்கவிளைவுகள் உண்டு என்பதால், அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை சந்தித்து தீர்வு காண்பது நன்று.தசை தளர்வு மற்றும் வலிமை பயிற்சிகள் மூலம் வலியினை கட்டுப்படுத்தலாம். மேலும் வலி வராமலும் தடுக்கலாம்.இயன்முறை மருத்துவ உபகரணங்கள் மூலம் வலியினை குறைக்கவும் வழிவகை செய்வர். இவை இல்லாமல் வீட்டில் கடைபிடிக்க சில ஆலோசனைகளும் வழங்குவர். உதாரணமாக…

*ஒரு அகல பாத்திரத்தில் அல்லது இதற்கென இப்பொழுது விற்பனை ஆகும் பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் அதில் அமரலாம்.
இதனால் வலி எளிதில் குறையும்.

*ஆங்கில எழுத்து ‘C’ வடிவில் தலையணை இதற்கென கிடைக்கும்.

அதனை நாம் அமரும் இடங்களில் எல்லாம் வைத்து அதன் மேல் அமரலாம். இதனால் எலும்பு தரையில் சென்று ஊன்றி வலி ஏற்படாமல் தடுக்கும். மேலும் மோசமாகாமல் பாதுகாக்கும்.

பத்து முதல் பதினைந்து நாட்களில் வலி குறைந்து முற்றிலும் குணம் பெறலாம். ஆனால், நீண்ட நாள் வலியோடு இருந்தவருக்கு சில நேரம் வலி முற்றிலும் குறைய தாமதமாகலாம்.

வருமுன் காப்போம்…

* அதிக நேரம் அமர்ந்திருக்க வேண்டிய தொழிலில் இருப்போர் வலி வரும் முன்னரே இயன்முறை மருத்துவரை அணுகி உரிய பயிற்சிகளையும்,
ஆலோசனைகளையும் பெற்று பின்பற்றி வரலாம்.

* அதிக உடற்பருமன் மற்றும் மிகவும் உடல் எடை குறைவாக இருப்போர் என இரு பிரிவினரும் முன்னரே தகுந்த உடற்பயிற்சிகள் எடுத்துக்கொள்வது நன்று.

* கர்ப்பிணி பெண்கள் கருத்தரித்தது முதல் இயன்முறை மருத்துவர் வழிகாட்டுதலின் படி உடற்பயிற்சிகள் செய்து வரலாம்.

* வயிற்றை சுற்றி அதிக கொழுப்பு (தொப்பை) உள்ளவர்கள் முன்னரே உடற்பயிற்சி செய்யலாம்.மொத்தத்தில் சிறிய வலியில் ஆரம்பித்து பெரும் அளவில் வலி தரும் இந்த காக்சிடைனியா பிரச்னையை மிக எளிதில் ஆரம்பத்திலேயே இயன்முறை மருத்துவர் துணை கொண்டு தீர்க்கலாம்.

The post கடைசி எலும்பும் கடுமையான வலியும்! appeared first on Dinakaran.

Related Stories: