போடி அருகே வரகுண பாண்டியன் கால கல்வெட்டு கண்டெடுப்பு

*8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது

போடி : போடி அருகே, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரகுண பாண்டியன் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.போடியில் இருந்து 8 கி.மீ தொலைவில் டொம்புச்சேரி மற்றும் உப்புக்கோட்டை கிராம ஊராட்சிகள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள தும்பச்சியம்மன் கண்மாய் அருகே, வயல்வெளியில் இரண்டு பக்கமும் விசித்திர எழுத்துக்களுடன் கல்வெட்டு இருப்பதாக விவசாயிகள், வரலாற்று ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வரலாற்று ஆர்வலர்கள் அங்கு சென்று கல்வெட்டை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து வரலாற்று பேராசிரியர் மாணிக்கராஜ் கூறுகையில், வயல்வெளியில் கிடக்கும் கல் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வட்டெழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டு 8 மற்றும் 9வது நூற்றாண்டில் ஆட்சி செய்த வரகுண பாண்டிய மன்னன் காலத்தைச் சேர்ந்தது. இதில் வட்டெழுத்துக்களால் விவரங்கள் கூறப்பட்டுள்ளன.

வரகுண பாண்டிய மன்னனின் பெயரைக் குறித்த முதல் வட்டெழுத்துக்கள் இதுவாக இருக்கலாம். இதன் மூலம் தேனி மாவட்டம் அழநாடு என்றும், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி கிராமப் பகுதிகள் திருவிடைபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

மேலும் இந்த கிராமப் பகுதியில் முன்பு சிவன் கோயில், பெருமாள் கோயில் இருந்ததாகவும் சிவன் கோயிலுக்கு 100 சாவா மூவா பேராடுகள் ரவி இயக்கம் என்பவர் மூலம் தானமாக வழங்கப்பட்டு ஆடுகள் என்றும் நூறுக்கு குறையாமல் பராமரிக்கப்பட்டு ஆடுகள் மூலம் பெறப்படும் பாலில் இருந்து கிடைக்கும் நெய்யினை கோயிலில் நித்திய விளக்கு ஏற்றி வர வேண்டும்.

அதேபோல பெருமாள் கோயிலுக்கு 25 சாவா மூவா பேராடுகள் அடி பொடி புலவன் என்பவருக்கு தானமாக வழங்கப்பட்டதற்கும் வழங்கப்பட்ட ஆடுகள் மூலம் கிடைக்கப்பெறும் பாலில் இருந்து நெய் தயாரித்து கோயிலுக்கு நித்திய விளக்குகள் ஏற்றி வரவேண்டும் என்றும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

சாவா மூவா பேராடுகள் என்றால் மரணம் இல்லாமல் முதுமையும் இல்லாமல் ஆடுகள் கோயிலில் இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது சிவன் கோயிலில் 100 ஆடுகளும் பெருமாள் கோயிலில் 25 ஆடுகள் என்றும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற கல்வெட்டுகள் இப்பொழுது பல்வேறு இடங்களில் நிறைந்துள்ளதால் வரலாற்று தொல்லியல் ஆய்வாளர்கள் முறையாக இப்பகுதிகளில் ஆய்வு செய்தால் இன்னும் நிறைய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும். வருங்கால வரலாற்று ஆர்வலர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றார்.

The post போடி அருகே வரகுண பாண்டியன் கால கல்வெட்டு கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: