பருவமழையால் நோய் தொற்று பரவலை தடுக்க 2.50 லட்சம் கால்நடைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி

*பணிகள் தீவிரம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் நோய் தொற்று பரவலை தடுக்க 2.50 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் ஆடு, மாடு, கோழிகள் வளர்த்து வருகின்றனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடைகள் வளர்ப்பு மிக முக்கிய தொழிலாக உள்ளது. இதனாலேயே கிராம மக்கள் கால்நடைகளை விரும்பி வளர்கின்றனர்.

மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு இணையாக ஆடு, மாடு, கோழிகள் வளர்க்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 276 பசு மற்றும் எருமை மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அதேபோல் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 980 வெள்ளாடுகளும், 2 லட்சத்து 16 ஆயிரத்து 943 செம்மறி ஆடுகளும், 1969 பன்றிகள் என 7 லட்சத்து 62 ஆயிரத்து 168 கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இது தவிர 5 லட்சத்திற்கும் மேல் கோழிகள் வளர்க்கப்படுகிறது. ஆடு, மாடு, கோழி, பன்றி, நாய், கழுதை, குதிரை என சுமார் 55 லட்சம் கால்நடைகள் மாவட்டத்தில் வளர்க்கப்படுகின்றன. நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்கிறது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும், தொடர்ந்து பெய்து வரும் மழையினாலும், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை முன்னெச்சரிக்கையாக கால்நடைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோவன் கூறியது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 276 பசு மற்றும் எருமை மாடுகள் உள்ளன. இந்த பசு மாடுகளுக்கு பருமழை காலத்தில் ஏற்படும் தோல் கழலை நோயினை கட்டுப்படுத்தும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருடாந்திர பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வரும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி வரை 2 லட்சத்து 55 ஆயிரத்து ஆயிரம் கால்நடைகளுக்கு செலுத்தப்பட உள்ளது.

மாவட்ட எல்லைப்புற கிராமங்களிலும், நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் பசுக்கள், காளைகள், வண்டி மாடுகள் மற்றும் நான்கு மாத வயதிற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது, இந்த நோயானது குறிப்பாக பசுக்களையே தாக்குகிறது. நோய்த்தாக்கம் ஏற்பட்ட பசுக்கள் அதிக காய்ச்சல், இரை உண்ணாமல் இருத்தல், தண்ணீர் குறைவாக அருந்துதல் போன்ற அறிகுறிகளோடு மிகவும் சோர்வாக காணப்படும்.

நோய் கண்ட பசுக்களின் தோலின் மேல் சிறு கொப்பளங்கள் போல் வட்ட வடிவில் தடிப்புகளோ, புண்களோ ஏற்படும். இந்த நோய் கால்நடைகளை தாக்கா வண்ணம் கால்நடை வளர்ப்போர், அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு இணை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

The post பருவமழையால் நோய் தொற்று பரவலை தடுக்க 2.50 லட்சம் கால்நடைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி appeared first on Dinakaran.

Related Stories: