பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியது கடற்கரை – எழும்பூர் 4வது பாதையில் அக்டோபரில் ரயில்கள் இயக்கப்படும்: சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்

சென்னை: சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே நடந்து ரயில் வழிப்பாதை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வரும் அக்டோபர் மாதம் பணிகள் நிறைவடைந்து, வழக்கம் போல ரயில்கள் இயக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தெரிவித்தார். சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே தற்போது 3 ரயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

தாம்பரம் முனையத்திலிருந்து வடமாநிலங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்குவதற்கும், மின்சார ரயில்களை தடையில்லாமல் இயக்குவதற்கும் சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை முக்கியமானதாக இருக்கிறது. நீண்டதூர மற்றும் சரக்கு ரயில்களை அதிகரிக்கவும் இந்த பாதை அவசியமாகிறது. எனவே, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.279.8 கோடியில் 4வது புதிய பாதை அமைக்க மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இதனை தொடர்ந்து சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி முதல் சென்னை கடற்கரையில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை நிறுத்தப்பட்டது. இதனால் வேளச்சேரி செல்லும் அனைத்து ரயில்களும் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து புறப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டு நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெற்று உள்ளது. இந்நிலையில், 4வது ரயில் பாதை அமைக்கும் பணிக்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நிலத்தில், 250 சதுர மீட்டர் நிலம் ரிசர்வ் வங்கிக்கும், 2 ஆயிரத்து 875 சதுர மீட்டர் பரப்பளவிலான இடம் கூவம் ஆறு (கூவம் ஆற்றின் கரையோர பகுதி) பகுதி மாநில அரசுக்கும் சொந்தமானது.

இதையடுத்து, மாநில அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ரயில்வே அதிகாரிகள் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதேபோல், 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான இடம் மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் வருவதால், அத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி பெரிய போராட்டத்திற்கு இடையே இடம் கையகப்படுத்தப்பட்டது. இடம்பெறுவதில் சற்று காலதாமதம் ஆனதால் திட்டமிட்ட காலத்தில் பணிகள் முடிக்க முடியாமல் போனது. இதனை தொடர்ந்து தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே நடந்து வரும் 4வது வழிப்பாதை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் பணிகள் நிறைவடைந்து வழக்கம் போல் கடற்கரையில் இருந்து வேளச்சேரி உள்பட அனைத்து ரயில்களும் இயக்கப்படும். பெரம்பூர் ரயில்நிலையத்தை சென்னையின் 4வது ரயில் முனையமாக மாற்றும் நடவடிக்கைக்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியது கடற்கரை – எழும்பூர் 4வது பாதையில் அக்டோபரில் ரயில்கள் இயக்கப்படும்: சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: