இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு; இதுவரை 13 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்சி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வடக்கு மாலுகு மாகாணம், டெர்னேட் தீவில் நேற்று முனதினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ருவா கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

ருவா கிராமத்திற்குச் செல்லும் முக்கிய சாலையும் துண்டிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மீட்பு பணிகளை தொடங்கினர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 பேரின் உடல்கள் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டன. மேலும் 6 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் இருந்து பலரும் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருள் காரணமாக நேற்று இரவு மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மீண்டும் தொடங்கியது. போலீசார், உள்ளூர் மீட்புப் படையினர் உட்பட 1000 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் நாட்களில் மேலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

 

The post இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு; இதுவரை 13 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: