ஐநா சபை: இஸ்ரேல் மீது தினம் தினம் தாக்குதல் நடத்தும் ஹமாஸ், ஹிஸ்புல்லா குழுக்களை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று ஐநா பொதுச்சபையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு பேசினார். காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளையும், லெபனானில் ஹிஸ்புல்லா குழுவினரையும் குறிவைத்து இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்தும் போரை நிறுத்த இஸ்ரேல் மறுத்து வருகிறது. இந்த தொடர் தாக்குதலுக்கு மத்தியிலும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு அங்கு பரபரப்பாக பேசியது பின்வருமாறு: இந்த வருடம் நான் இங்கு வர விரும்பவில்லை. என் நாடு உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த மேடையில் பேசுபவர்கள் பலர் என் நாட்டின் மீது பொய்கள் மற்றும் அவதூறுகளை பேசுவதை கேட்ட பிறகு, நான் இங்கு வந்து பேசி உண்மையை நிலைநாட்ட முடிவு செய்தேன். இஸ்ரேல் எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. ஆனால் நீங்கள் எங்களைத் தாக்கினால், நாங்கள் உங்களைத் தாக்குவோம். எங்கள் பிராந்தியத்தில் பல பிரச்சனைகளுக்கு பின்னால் ஈரான் உள்ளது. எங்கள் நாட்டின் மீது தினம் தினம் ஏவுகணைகள் வந்து விழுகின்றன. காசாவில் உள்ள ஹமாஸ் குழுவினரும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுவினரும் தினம் தினம் ஏதாவது ஒரு வகையில் எங்கள் எல்லைகளை தாக்குகிறார்கள்.
வருடம் முழுவதும் போர் பதற்றத்தில் எங்கள் மக்கள் வாழ வேண்டிய நிலை உள்ளது. இதை முற்றிலும் நிறுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. எங்கள் நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் நியாயமானது. எங்களை தற்காத்துக் கொள்வது அவசியமானது. அதன் அடிப்படையில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா குழுவினரை ஒழிக்கும் வகையில் இந்த போர் தொடரும். அதை நிறுத்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
தயவுசெய்து போரை நிறுத்த உத்தரவிடுங்கள்
ஐநா சபையில் பேச இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெத்தன்யாகு மேடை ஏறியதும், அங்கு இருந்த உலக நாடுகளின் தலைவர்கள் தயவு செய்து போரை நிறுத்த உத்தரவிடுங்கள் என்று குரல் எழுப்பினர். அதே போல் நெத்தன்யாகுவுக்கு முன் பேசிய ஸ்லோவேனியப் பிரதமர் ராபர்ட் கோலோப்,’மிஸ்டர் நெத்தன்யாகு, இப்போரை நிறுத்துங்கள்’ என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.
ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் குண்டுமழை
ஹிஸ்புல்லா போராளிகள் குழுவின் தலைமை அலுவலகத்தை குறிவைத்து நேற்று இஸ்ரேல் விமானப்படை பயங்கர தாக்குதல் நடத்தியது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா குழுவின் அலுவலகத்தில் சரமாரி குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
The post தினம் தினம் தாக்குதல் நடத்தும்; ஹமாஸ், ஹிஸ்புல்லா குழுக்களை ஒழிக்கும் வரை போர் தொடரும்: ஐநா பொதுச்சபையில் இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.