லெபனானில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் வான்படை தளபதி பலி..!!

லெபனான்: லெபனானில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் வான்படை தளபதி முகமது உசேன் கொள்ளப்பட்டது அங்கு மேலும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளில் வெடிகுண்டு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அந்த அமைப்பினர் இஸ்ரேல் மீது குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர் இதற்கு பதிலடியாக தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.

தாக்குதல்களில் அப்பாவி மக்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெயிருட்டில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் வான்படைத் தளபதி முகமது உசேன் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேல் குடிமக்கள் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு முகமது உசேன் பின்னணியாக செயல்பட்டவர் என இஸ்ரேல் பாதுகாப்புபடை தெரிவித்துள்ளது. இதனிடையே எமனிலிருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசப்பட்டதால் டெல் அவிவ் நகரம் முழுவதும் அபாய எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டது.

அதே சமயம் ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். லெபனான் மீது தரைவழி தாக்குதலை தொடங்க இஸ்ரேல் திட்டமிட்டு வரும் நிலையில் ஏமன் தரப்பிலிருந்து நிகழ்த்தப்பட்டிருக்கும் ஏவுகணை தாக்குதலால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் போர் தீவிரமடைவதை தடுக்கவும் காஸாவில் ராஜ தந்திர நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளிக்கும் விதமாகவும் இஸ்ரேல் லெபனான் எல்லையில் 21 நாள் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் உலக நாடுகளின் போர் நிறுத்த கோரிக்கைகளை இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

The post லெபனானில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் வான்படை தளபதி பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: