ஆயுர்வேதத் தீர்வு!

நன்றி குங்குமம் டாக்டர்

பித்தப்பை கற்களுக்கு….

பொதுவாக நம் உடலில் கற்களானது சிறுநீரகத்திலும் அதைச்சார்ந்த உறுப்புகளிலும் அடுத்தது பித்தப்பையிலும் உருவாகிறது. சிறுநீரகக் கற்கள் என்று வரும்போது யாரும் சிறுநீரகத்தை அகற்றுவது பற்றி பேசுவதில்லை ஆனால் பித்தப்பைக் கல் என்று வரும்போது மட்டும் உடனே அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது. இல்லையேல் இது பல உபாதைகளை ஏற்படுத்தக் கூடும் என்றும், இதற்கு மருந்துகளால் தீர்வு காண முடியாது என்றும் பல முற்பட்ட கருத்துகளை முன் வைக்கிறார்கள்.

இதனால் நாம் மிகுந்த மனக்குழப்பம் அடைந்து கவலைக்குள்ளாகிறோம். எப்படி நமக்கு இரு சிறுநீரகங்கள் இருந்தாலும் கற்களுக்காக எந்த சூழ்நிலையிலும் அதை அகற்றுவதை பற்றி நாம் ஒருபோதும் யோசிப்பது இல்லையோ அதுபோல் பித்தப்பையும் நம் உடலில் பல்வேறு கடமைகளை செய்கிறது. அதனால் பித்தப்பை கல் என்று அறிந்த உடனேயே பித்தப்பையை அகற்றுவது என்பது எந்த சூழ்நிலையிலும் ஒரு தீர்வாக இருக்க முடியாது.

நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் என்ற வள்ளுவரின் வாக்கின்படி பித்தப்பை கல் எதனால் உருவாகிறது.. என்ன காரணம்.. அதை நம் உணவு முறையாலும் வாழ்க்கை முறையாலும் மருந்துகளினாலும் எவ்வாறு மாற்றி அமைத்து பித்தப்பை கல்லை கரைத்து வெளியேற்றுவதோடு அங்கு மறுபடியும் கல் உருவாகாதவாறு எப்படி பார்த்துக் கொள்வது போன்றவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பித்தப்பை கற்கள்

நம் கல்லீரலின் கீழ் உள்ள ஒரு சிறிய உறுப்பான பித்தப்பையில் உள்ள பித்த நீர் இறுகி பித்தப்பை கற்களாக உருவாகின்றன. பித்தப்பையானது, கல்லீரலில் தயாரிக்கப்படும் பித்தத்தை சேமித்து வெளியிடுகிறது. இந்த பித்த நீரானது செரிமானத்திற்கு உதவும் ஒரு பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள ஒரு திரவமாகும். பித்தப்பையில் அதிகப்படியான கொழுப்பு குவியத் தொடங்கும் போது, அது கற்களாக மாறும். பித்தப்பை கற்கள் கடுகு அளவு முதல் பெரிய நெல்லிக்காய் அளவு வரை கூட இருக்கலாம். அவை பித்த நாளத்தில் அடைப்பு ஏற்படுத்தும் வரை, வலியை உண்டாக்கும் வரை, அவை இருப்பதே தெரிய வாய்ப்பில்லை.

பித்தப்பை கல் வரக் காரணங்கள்

பெண்களில் அதிலும் குறிப்பாக 40 வயதிற்குள், வெண்மை நிறத்திலும், உடல் பருமனாகவும், சதைகள் அதிகம் உள்ளபோதும், மாதவிடாய் சரியாக மாதா மாதம்
ஏற்படாத போதும் வரலாம்.

குடும்ப வரலாறு

*பொதுவாக 40 வயதுக்கு உட்பட்டவர்கள்
*உடல் பருமன்
*உணவில் அதிக கொழுப்பு மற்றும் குறைந்த நார்ச்சத்து எடுத்துக் கொள்வது
*உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்
*கருத்தடை மாத்திரைகள் அல்லது ஹார்மோன் மாத்திரைகள் எடுப்பது.
*கர்ப்பிணிப் பெண்களுக்கு
*நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு
*குடல் நோய்கள் உள்ளபோது
*கொலஸ்ட்ராலைக் குறைக்க மருந்து உட்கொள்ளும்போது
*குறுகிய காலத்தில் நிறைய எடை இழக்க முயற்சிகள் மேற்கொள்ளும்போது

இப்படி பல காரணங்கள் இருந்தாலும் அன்றாடம் நாம் கடைப்பிடிக்கும் சில தவறான பழக்கங்களாலும் பித்தப்பை கற்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக காலையில் உணவை சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் வெகுநேரம் கழித்து சாப்பிடுவது, காலை உணவையே தவிர்த்து நேராக மதிய உணவை சாப்பிடும்போது உணவில் கவனம் செலுத்தாமல் உணவை சரியாக மென்று சாப்பிடாமல் இருப்பது.

அடிக்கடி ஹோட்டல் மற்றும் துரித உணவகங்களில் உணவு அருந்துவது, சுட்ட எண்ணெயிலேயே மறுபடியும் மறுபடியும் உணவுப்பண்டங்களை சுட்டு சாப்பிடுவது, நெடுநாட்களாக மலச்சிக்கல் பிரச்னையில் அவதிப்படுவது. தண்ணீர் சரியாக குடிக்காதது, நார்ச்சத்து உள்ள உணவுகளை தவிர்ப்பது, அடிக்கடி விரதம் இருப்பது. இரவு நேரங்களில் மிகவும் தாமதமாக உணவை அருந்தி உடனே படுத்து தூங்கிவிடுவது ஆகியவை பித்தப்பை கற்கள் உருவாவதற்கு மிக முக்கியமான காரணங்களாக நாம் பார்க்கிறோம்.

நம் செரிமானத்திற்கு பித்தம் தேவை. இது பொதுவாக கொலஸ்ட்ராலை கரைக்கும். நம் பித்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளபோது அதை செரிமானம் செய்ய முடியாதபோது, கொலஸ்ட்ராலானது கற்களை உருவாக்கலாம். சிரோசிஸ், நோய்த்தொற்றுகள் மற்றும் ரத்தக் கோளாறுகள் போன்ற நிலைமைகள் நம் கல்லீரலில் அதிக பிலிரூபினை உருவாக்கி அதன்மூலம் கற்கள் உண்டாகலாம். கர்ப்பம் அல்லது கட்டிகள் வளர்ச்சி அடையும்போது நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு அதனாலும் கற்கள் உண்டாகலாம்.

பித்தப்பைக் கற்களின் வகைகள்

கொலஸ்ட்ரால் கற்கள் – இவை பொதுவாக மஞ்சள், பச்சை நிறத்தில் இருக்கும். அவை மிகவும் பொதுவானவை, 80 சதவீதம் பித்தப்பை கற்கள் இந்த வகைநிறமி கற்கள் – இவை சிறியதாகவும் கருமையாகவும் இருக்கும் இவை பிலிரூபினால் ஆனது.

பித்தப்பை கற்களின் அறிகுறிகள்

*மேல் வயிற்றில் வலி, பெரும்பாலும் வலதுபுறம், விலா எலும்புகளுக்குக் கீழ்
*வலது தோள்பட்டை அல்லது முதுகில் வலி
*வயிற்றெரிச்சல்
*வாந்தி
*செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல் மற்றும் வாயு உள்ளிட்ட பிற செரிமான பிரச்னைகள்.
*தீவிர தொற்று அல்லது அழற்சியின் அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது அவசியமாகும். அவை

*பல மணி நேரம் நீடிக்கும் வயிற்று வலி
*காய்ச்சல் மற்றும் குளிர்
*மஞ்சள் தோல் அல்லது கண்கள்
*அடர் மஞ்சள் நிற சிறுநீர் மற்றும் வெளிர்நிற மலம்.

பித்தப்பை நோய் கண்டறிதல்

உடல் பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனைகள் அழற்சி அல்லது அடைப்புக்கான அறிகுறிகளை சுட்டிக்காட்டி மற்ற நோய் நிலைமைகளை நிராகரிக்க உதவும். அல்ட்ராசவுண்ட். சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ, இஆர்சிபி போன்ற பரிசோதனைகள் பித்தப்பை கற்களை துல்லியமாக கணிக்க உதவும். Cholescintigraphy அல்லது Hepatoboliary iminodiacetic acid (HIDA) ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் நம் பித்தப்பை சரியாக அழுத்துகிறதா என்பதை பார்க்க உதவும்.

பித்தப்பைக் கற்களினால் ஏற்படும் சிக்கல்கள்

பித்தப்பை கற்கள் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அவை.பித்தப்பை அழற்சி (கடுமையான cholecystitis): இது வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடும். உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், பித்தப்பை சிதைந்துவிடலாம். பித்த நாளங்களில் அழற்சி கடுமையான cholecystitis அடைப்பட்ட குழாயில் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். பாக்டீரியா நம் ரத்த ஓட்டத்தில் பரவினால், அவை செப்சிஸ் எனப்படும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தும். பித்தப்பை புற்றுநோய் இது அரிதானது. ஆனால் நாட்பட்ட பித்தப்பை கற்கள் பித்தப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன.

பித்தப்பை சிகிச்சை

பித்தப்பையில் கற்கள் உள்ளவர்களின் பெரும்பாலானோர் பித்தப்பைகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துவிடுகிறார்கள். ஆனால் அது பல சந்தர்ப்பங்களில் தேவையே இல்லை.ஆயுர்வேதத்தில் பித்தப்பை கல் சிகிச்சை என்பது பித்தப்பையில் அழற்சி இல்லாதபோதும். கற்கள் 20mm அளவிற்கும் சிறிதாக உள்ள போதும். பல சிறிய கற்கள் ஒன்றாக இருக்கும் போதும், சிகிச்சை எளிதாகிறது. ஒருவேளை கல் அடைப்பினால் மஞ்சள் காமாலை இருக்குமானால் அதற்கும் சிகிச்சைகளை கொடுக்க வேண்டும்.

பலர் பித்தப்பை கற்களை பித்தஷமரி என்று கூறினாலும் இது குன்மம் அல்லது கிரகனியின் ஒரு நிலையாகவே பார்க்கப்படுகிறது. அவற்றின் ஆயுர்வேத சிகிச்சை முறைகளை பித்தப்பை கற்களுக்கு கொடுக்கும்போது நல்ல பலனை தருகிறது.பொதுவாக எந்த அறிகுறியும் இல்லை என்றால் சிகிச்சை தேவையில்லை சில சிறிய பித்தப்பை கற்கள் தானாகவே கரைய வாய்ப்புள்ளது. கற்களை முற்றிலுமாக கரைக்க சில மாதங்கள் மருந்து எடுக்க வேண்டியிருந்தாலும் அதை நிறுத்திய பிறகு கற்கள் மீண்டும் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.

பித்தப்பை கல் நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை

பித்தப்பை கல் உள்ளவர்களுக்கு உஷ்ணமான, எண்ணெய் தன்மையற்ற, செரிமான சக்தியை அதிகரிக்கக்கூடிய, குல்ம நோயினை குணப்படுத்தும் தன்மையுடைய, காரச் சுவையுடைய மருந்துகளும், உணவுகளும் கொடுக்க வேண்டும். பித்த தோஷத்தினை அதிகரிக்கக் கூடியவற்றையும், கப தோஷத்தினை விளயனம் (இளக்கம்) செய்யக்கூடிய மருந்துகளையும் கொடுக்க வேண்டும். திராயந்தியாதி, குலத்தாதி, சப்தசாரம், வாரனாதி முதலிய கசாயங்கள் பித்தப்பை கற்களில் நல்ல பலன் அளிக்கின்றது. இவற்றை காலை மாலை உணவிற்கு முன் வெந்நீரில் கலந்து கொடுக்கலாம்.

அபா மார்க்க (நாயுருவி) சூரணத்தினை

குலத்த (கொள்ளு) கசாயத்துடன் உட்கொள்ளலாம். திரிகடுகு சூரணத்தினை அளவு எடுத்து மோருடன் சேர்த்து கொடுக்கலாம். கறிவேப்பிலை பொடியை ஒரு தேக்கரண்டியளவு எடுத்து மோருடன் சேர்த்துக் கொடுக்கலாம். திரிகடுக சூரண மாத்திரை, ஷட்தரண குளிகை, சுதர்சனத் குளிகை ஆகியவற்றை காலை மாலை உணவிற்கு பின்பு கொடுக்கலாம். பித்தப்பை கற்களில் திராஷாதிலேகியம் சிஞ்சாதி லேகியம், சரபுங்க வில்வாதி லேகியம், குடஜதிரிபலாதி லேகியம், அதிஷ்ட ரசாயனம், திப்பிலி ரசாயனம் முதலிய மருந்துகள் நல்ல பலனை அளிக்கின்றன. மண்டூர செந்தூரமானது தேனுடன் சேர்த்து கொடுக்கலாம். முருங்கை மரப் பட்டையை கொள்ளுடன் சேர்த்து சூப் செய்து சாப்பிட நல்ல பலன் அளிக்கும். குல்மத்தில் பயன்படும் மருந்துகளான ஹிங்குவசாதி சூரணம், ஹிங்குவாஷ்டக சூரணம் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

பித்தப்பை கற்களைத் தடுக்கும் சில வாழ்க்கைமுறை மாற்றங்கள்

சுருக்கமாக பித்தப்பை கற்கள் வரக் காரணங்களாக கூறப்பட்ட அனைத்தையும் தவிர்க்க வேண்டும். மேலும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை தவிர்க்க வேண்டும். குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது, வாரத்தில் 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் அதிக எடையைக் குறைக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.இவற்றை கடைப்பிடிப்பதால் பித்தப்பை கற்கள் உருவாவதைத் தவிர்க்கலாம்.

தொகுப்பு: உஷா நாராயணன்

The post ஆயுர்வேதத் தீர்வு! appeared first on Dinakaran.

Related Stories: