மகா ரதம் சீரமைப்பு பணி தீவிரம் விதானம் முழுமையாக புதுப்பிக்கப்படுகிறது திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு

திருவண்ணாமலை, ஆக. 23: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு, மகா ரதம் எனப்படும் பெரிய தேர் முழுமையாக சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, வரும் டிசம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது. தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளான்று நடைபெறும் பஞ்சரத பவனி (தேர் திருவிழா) மிகவும் பிரசித்தி பெற்றது. காலை தொடங்கி, நள்ளிரவு வரை மாடவீதியில் பஞ்சரதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பவனி வருவது தனிச்சிறப்புக்குரியது. இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாடவீதியில் பவனி வரும் பஞ்சரதங்களை முன் கூட்டியே சீரமைத்து தயார் நிலையில் வைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதையொட்டி, விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், மகா ரதம் எனப்படும் பெரிய தேர், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவற்றை, சீரமைத்து பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, உயரத்திலும், எடையிலும் மிகப்பெரியதான மகா ரதம் எனப்படும் பெரிய தேர் சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக முழு வீச்சில் நடந்து வருகிறது. அதை ஒட்டி, தேர் சுவாமி பீடத்துக்கு மேற்பகுதியில் உள்ள விதானம் முற்றிலுமாக அகற்றப்பட்டு உயர்தர மரங்களால் புதிதாக வடிவமைக்கப்படுகிறது. இப்பணிகள் நிறைவடைந்ததும், தேர் சக்கரங்களுக்கு பொருத்தப்பட்டுள்ள ஹைட்ராலிக் பிரேக் மற்றும் தேர் அச்சுகள் ஆகியவற்றை மறு சீரமைப்பு செய்ய உள்ளனர். இந்நிலையில், ஆண்டுதோறும் தீபத் திருவிழாவுக்கு முன்பாக பெரிய தேரில் பழுதுகள் மட்டும் கண்டறியப்பட்டு சீரமைக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பெரிய தேர் முற்றிலுமாக மறு சீரமைக்கும் பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மகா ரதத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும் அம்மன் தேர் உள்ளிட்ட மற்ற பஞ்சரதங்கள் சீரமைக்கும் பணி தொடங்கும் என தெரிகிறது.

The post மகா ரதம் சீரமைப்பு பணி தீவிரம் விதானம் முழுமையாக புதுப்பிக்கப்படுகிறது திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு appeared first on Dinakaran.

Related Stories: