தரிசனத்துக்கு அத்துமீறி நுழைந்ததை தடுத்த பெண் ஊழியர் மீது தாக்குதல் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, டிச.21: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசன வரிசைக்குள் குறுக்கே நுழைந்ததை தடுத்த கோயில் பெண் ஊழியரை தாக்கிய இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா கடந்த 13ம் தேதி நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து, வரும் 23ம் தேதி வரை மலை மீது தீபம் காட்சியளிக்கும். எனவே, தீபத் திருவிழா முடிந்த பிறகும் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் ஆகியோர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தரிசனத்திற்காக குவிக்கின்றனர். எனவே, தரிசன வரிசையில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தரிசன வரிசை முறைப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் நான்காம் பிரகாரத்தில் உள்ள சின்ன நந்தி பகுதியில், தரிசன வரிசைக்குள் நேற்று 2 நபர்கள் குறுக்கே நுழைய முயன்றுள்ளனர்.

எனவே, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த கோயிலில் தட்டச்சராக பணிபுரியும் தமிழ்பிரியா, இரண்டு நபர்களையும் தடுத்து நிறுத்தியுள்ளார். அதனால், ஆத்திரமடைந்த இரண்டு பேரும், தமிழ் பிரியாவை தாக்கியுள்ளனர். அதனால், நிலை தடுமாறி கீழே விழுந்த தமிழ் பிரியாவுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக, அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, தமிழ்பிரியா திருவண்ணாமலை டவுன் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், பணி செய்ய விடாமல் தடுத்து தரிசன வரிசையில் அத்து மீறி நுழைய முயன்றதாக ராஜாமணி மனைவி ராஜலட்சுமி(52) மற்றும் அருணகிரி மகன் கணேஷ்(34) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக, கிளி கோபுரம் நுழைவு வாயிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post தரிசனத்துக்கு அத்துமீறி நுழைந்ததை தடுத்த பெண் ஊழியர் மீது தாக்குதல் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.

Related Stories: