மின்சார வாரிய காலி பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: மின்சார வாரிய காலி பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மின்வாரிய கேங்மேன் சங்கத்தினர் நாளை அறிவித்துள்ள ஸ்டிரைக்கை எதிர்த்த பொதுநல வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இன்று மதியம் 2.15க்குள் பதிலளிக்குமாறு மின் பகிர்மான கழகத்திற்கு உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடந்திருந்தார். அந்த வழக்கில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 36 ஆயிரம் காலிபணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு மின் வாரிய கேங்மேன் தொழிற்சங்கம், நாளை வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் நலன் கருதி வேலைநிறுத்த போரட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பொது நலனை கருத்தில் கொள்ளாமல், தங்களது சுயநலத்திற்காக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மின் வாரியம் கடுமையான நிதி நெருக்கடி சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார். விழா காலங்கள் நெருங்கி வரும் நிலையில் இந்த வேலைநிறுத்த போராட்டத்தினால் பொது மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் சுட்டிக் காட்டி உள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பி பி பாலாஜி ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது.

அப்போது மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன், தாங்கள் அறிவித்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் தமிழக முழுவதும் மின் பகிர்மான கழகத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளதாக குறிப்பிட்டார். இதனால் கேங்மேன்களை மின் இணைப்பு பணிகளுக்கு பயன்படுத்துவதாகவும் , தகுதி இல்லாத இந்தப் பணிகளில் தங்களை பயன்படுத்துவதனால் மூன்று ஆண்டுகளில் மின் விபத்து ஏற்பட்டு 70 பேர் இறந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையின் போது ஆஜரா யிருந்த மின்வாரிய தரப்பு வழக்கறிஞர் டி.ஆர். அருண்குமாரிடம், மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை எப்போது நிரப்புவீர்கள் என்பது குறித்து இன்று மதியம் 2.15 மணிக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

The post மின்சார வாரிய காலி பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: