ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட 1,600 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்: பெரிய ஓட்டல்களுக்கு விநியோகம் செய்ய இருந்தது கண்டுபிடிப்பு

சென்னை: ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட 1,600 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்டிறைச்சி சென்னையில் உள்ள பெரிய ஓட்டல்களுக்கு விநியோகம் செய்யப்பட இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக ஆடு மற்றும் மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டு, சென்னையில் உள்ள பெரிய பெரிய ஓட்டல்களுக்கு விநியோகிக்கப்படுவதாக தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.

இதன் ஒரு பகுதியாக ஜோத்பூரில் இருந்து மதுரை நோக்கி செல்லும் ரயிலில் பாதுகாப்பாற்ற முறையில் ஆட்டிறைச்சி கொண்டுவரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா, சதாசிவம், ஜெபராஜ், கண்ணன், அழகுபாண்டி, ராஜபாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் குழு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நேற்று தீவிரமாக கண்காணித்தனர்.

இந்நிலையில் ஜோத்பூரில் இருந்து புறப்பட்ட ரயில் 7வது நடைமேடைக்கு வந்தது. இதையடுத்து ரயிலில் இருந்து பார்சல்கள் இறக்கப்பட்டன. அப்போது அதிகாரிகள் குழு அந்த பார்சல்களை தீவிரமாக சோதனையிட்டது. அப்போது 26 பெரிய தெர்மாகோல் பெட்டிகளில் ஐஸ் கட்டிகள் போடப்பட்ட நிலையில் ஆட்டிறைச்சி இருந்தது. அவை கெட்டுப்போயிருப்பதும் தெரியவந்தது. ஆனால் இந்த பார்சல்களுடன் வந்த பெண்மணி, ஆட்டிறைச்சி கெட்டுப்போகவில்லை என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் உரிய பாதுகாப்பின்றி இறைச்சி கொண்டு வந்திருப்பதையும், அவை கெட்டுப்போயிருப்பதையும் அதிகாரிகள் ஆதாரத்துடன் விளக்கினர். இதை தொடர்ந்து, பெட்டிகளில் இருந்த 1,600 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் அழிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட ஆட்டிறைச்சி மாதிரிகள் பரிசோதனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது.  இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘பொதுவாக ஆட்டிறைச்சி மைனஸ் 18 டிகிரி செல்சியசில் வைத்து எடுத்துவர வேண்டும்.

ஐஸ் கட்டிகளை நேரடியாக போட்டு ஆட்டிறைச்சியை கொண்டுவரக்கூடாது. இந்த ஆடுகள் முறையாக அனுமதி பெற்று வெட்டி கொண்டுவரப்பட்டதா என்றும் தெரியவில்லை. அதற்கான உரிய சான்றிதழும் இல்லை. அந்தவகையில் இந்த இறைச்சி கெட்டுப்போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை சென்னையில் உள்ள பெரிய ஓட்டல்களில் விநியோகம் செய்யப்பட இருந்தது. அதை தடுத்துள்ளோம். இந்த இறைச்சி விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

The post ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட 1,600 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல்: பெரிய ஓட்டல்களுக்கு விநியோகம் செய்ய இருந்தது கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: