வில்லிபுத்தூரில் குரங்குகள் அட்டகாசம்: தேர் உச்சியில் அமர்ந்து சேட்டை

 

வில்லிபுத்தூர், ஆக.18: வில்லிபுத்தூர் நகரில் கடந்த சில வாரங்களாக குற்றாலத்தில் இருந்து வந்த குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. நகரில் ஆங்காங்கே மரங்களில் இந்தக் குரங்குகள் தங்கியுள்ளன. இந்த நிலையில் அவ்வப்போது குடியிருப்பு பகுதியில் புகுந்து குழந்தைகளை மிரட்டுவது, உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வது என சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் ரேஞ்சர் செல்லமணி உத்தரவின் பேரில் வனத்துறையினர் சில குரங்குகளை பிடித்துச் சென்று வனப்பகுதிக்குள் விட்டனர்.

இருப்பினும் மேலும் சில குரங்குகள் நகருக்குள் சுற்றி வருகின்றன. திடீரென தெருக்கள், வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை தூக்கி விட்டு செல்கின்றன. குழந்தைகள் கையில் வைத்திருக்கும் பொருட்களையும் பறித்துச் செல்கின்றன.
நேற்று காலை ஒரு குரங்கு ஆண்டாள் கோயில் தேர் உச்சிக்கு சென்று கலசத்தைப் பிடித்து கொண்டு சுமார் 3 மணி நேரம் சேட்டைகள் செய்து கொண்டிருந்தது. உயரமான இடங்களில் அமர்ந்துகொண்டு போவோர், வருவோரை கவனித்து உணவுப் பொருட்கள் கொண்டுவருவது தெரிந்தால் தாவிச் சென்று பறிக்க முயல்கின்றன. இதனால் பொதுமக்கள் சற்று அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே தற்போது நகருக்குள் சுற்றிவரும் குரங்குகளையும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வில்லிபுத்தூரில் குரங்குகள் அட்டகாசம்: தேர் உச்சியில் அமர்ந்து சேட்டை appeared first on Dinakaran.

Related Stories: