4 கிலோ கஞ்சா கடத்திய ஆசாமி கைது கலால் போலீசார் அதிரடி காட்பாடிக்கு ரயில் மூலம்

வேலூர், ஆக.18: காட்பாடிக்கு ரயில் மூலம் 4 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபரை வேலூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். வேலூர் எஸ்பி மதிவாணன் உத்தரவின்பேரில் வேலூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ ராஜகுமாரி மற்றும் போலீசார் நேற்று மதியம் காட்பாடி ரயில் நிலையம் பஸ் நிறுத்தம் பகுதியில் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில் நிலையத்தில் இருந்து பஸ் நிறுத்தத்துக்கு கையில் பையுடன் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனையிட்டனர்.

சோதனையில் அவரது பையில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் மர்டாமேகா அடுத்த மர்தாமேக்கை சேர்ந்த புரஷ்டம் ஸ்னைசர் மகன் டுனா ஸ்னைசர்(24) என்பதும், கஞ்சாவை ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்து தமிழகத்தில் விற்க முயன்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் இருந்து ₹40 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து டுனா ஸ்னைசரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல் மாவட்டம் முழுவதும் கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 41 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post 4 கிலோ கஞ்சா கடத்திய ஆசாமி கைது கலால் போலீசார் அதிரடி காட்பாடிக்கு ரயில் மூலம் appeared first on Dinakaran.

Related Stories: