நில அபகரிப்பு தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 17: சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனது நிலத்தை அபகரித்துக் கொண்டதுடன், மிரட்டல்கள் விடுக்கப்படுவதால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியும், நிலத்தை மீட்டு ஒப்படைக்க உத்தரவிடக் கோரியும் சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, இந்த விவகாரத்தில் முழுக்க, முழுக்க போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளதாக கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, நிலம் கார்த்திக்குக்கு சொந்தமானது என்பதற்கான அனைத்து முகாந்திரம் இருப்பது தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டு நிலத்தை அபகரிக்க காவல்துறையினர் உதவியுள்ளனர்.
இதுபோன்ற வழக்குகளில் வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையாகவும் விருப்பு, வெறுப்பின்றி விசாரிக்க முடியாது என்பதை விசாரணை அமைப்புகள் வெளிப்படுத்தி வருகின்றன. இதுபோன்ற நிலைமை தொடர்ந்தால் அப்பாவி பொதுமக்களுக்கு காவல்துறை மீதான நம்பிக்கை குலைந்து விடும்.

ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழ்ந்த நில அபகரிப்பு தொடர்பான கொலை மற்றும் வன்முறை சம்பவங்களை போலீசார் எப்படி விசாரிக்கின்றனர் என்பதை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. எனவே, மனுதாரர் கார்த்திக் அளித்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்படுகிறது. சிபிஐ சிறப்புக் குழுவை அமைத்து 4 மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post நில அபகரிப்பு தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: