திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் ஆந்திராவில் பதுங்கிய 3 ரவுடிகள் கைது

சென்னை, ஆக.17: சோழவரம் கோட்டைமேடு கென்னடி தெரு சேர்ந்தவர் ஜெகன் (38). இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வருகிறார். இவரது மனைவி அபிஷா பிரியா வர்ஷினி (33), சோழவரம் ஊராட்சி துணைத் தலைவராக உள்ளார். இவர்களின் வீட்டில் நேற்று முன்தினம் 2 பைக்குகளில் வந்த 5 பேர், நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பி சென்றனர். இதில் யாருக்கும் காயம் இல்லை. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது.

ஆங்காடு ஊராட்சிக்குட்பட்ட சிறுணியம் காலனி கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (60). இவர் குடிநீர் கேன், ஹாலோ பிளாக் கல் விற்பனை செய்து வருகிறார். இவரது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் கண்ணாடிகளையும் உடைத்து, வீட்டுக்குள் சென்று அங்கிருந்த கார் கண்ணாடியும் உடைத்து, கதவு ஜன்னல்களையும் கத்தியால் சேதப்படுத்திய மர்ம நபர்கள், பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர். இதேபோல் சோழவரம் பைபாஸ் சாலை லாரி பார்க்கிங் பகுதிக்கு சென்று நாட்டு வெடிகுண்டு வீசி, அங்கிருந்த சோழவரம் அம்பேத்கர் நகர் சேர்ந்த லாரி டிரைவர் சிவா (40) என்பவரை கத்தியால் கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். பின்னர், சந்தேகத்தின் அடிப்படையில், சிறுணியம் கிராமம் பெருமாள் கோயில் தெரு சேர்ந்த அஜித்குமார் (29), புழல் காவாங்கரை விபி நகரைச் சேர்ந்த நித்தீஸ்வரன் (19) ஆகிய இரண்டு பேரை பிடித்து சோழவரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர். மேலும் பிரபல ரவுடிகளை பிடிக்க செங்குன்றம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆந்திராவில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி இரணியம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த டியோ கார்த்திக் (27), நல்லூரை அடுத்த ஆட்டந்தாங்கல் எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்த குதிரை சுரேஷ் (28), பாடியநல்லூர் பாரதியார் தெருவைச் சேர்ந்த குண்டு கோபி (25) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மாமூல் கேட்டு கொடுக்காததால் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது.

The post திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் ஆந்திராவில் பதுங்கிய 3 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: