வங்கதேச அரசியல் மாற்றத்தால், அந்நாட்டில் செயல்பட்டு வந்த தீவிரவாத அமைப்புகளால் மீண்டும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளது. ஷேக் ஹசீனாவின் ஆட்சி காலத்தில், தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதித்து இருந்தார். ஆனால் தற்போது அந்த தீவிரவாத அமைப்புகள் வேறு பெயரில் செயல்படத் தொடங்கி உள்ளன. அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மீது தாக்குதல் நடத்த சதி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வங்கதேச விவகார நிபுணர்கள் கூறுகையில், ‘இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) அமைப்புடன், வங்கதேசத்தில் செயல்படும் அன்சருல்லா பங்களா அமைப்பு (ஏபிடி) கூட்டு சேர்ந்துள்ளது.
வங்கதேசத்தில் வன்முறையை பரப்புவதற்கு ஜமாத்-இ-இஸ்லாமி, ஏபிடி உள்ளிட்ட பிற தீவிரவாத குழுக்கள் தீவிரமாக செயல்பட்டன. அன்சருல்லா பங்களா அமைப்பானது, வங்கதேச தீவிரவாத அமைப்பாகும். கடந்த 2007ம் ஆண்டு ஜமாத் உல் முஸ்லிமீன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. நிதிப் பற்றாக்குறையால் அந்த அமைப்பு மூடப்பட்டது. பின்னர் 2013ல் அன்சருல்லா பங்களா அமைப்பாக மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு கடந்த 2015ல் தடை செய்யப்பட்டது. பின்னர் இந்த அமைப்பு அன்சார் அல்-இஸ்லாம் என்ற பெயரில் மீண்டும் செயல்படத் தொடங்கியது. கடந்த 2017ல் மீண்டும் தடை செய்யப்பட்டது. அன்சார் அல்-இஸ்லாம் பின்னர் தன்னை சர்வதேச தீவிரவாத அமைப்பான அல் கொய்தாவின் வங்காளதேச கிளை அமைப்பாக அறிவித்தது. தெற்காசிய தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில், இந்த அமைப்பின் பெயரும் உள்ளது. மேற்கண்ட தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த 425 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தில் தற்போது 9 தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
அதில் முதலிடத்தில் அன்சருல்லா பங்களா அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதற்கு அடுத்த இடங்களில் அன்சார் அல்-இஸ்லாம், லஷ்கர்-இ-தொய்பா (வங்கதேசம்), ஹர்கத்-உல்-ஜிஹாத் அல்-இஸ்லாமி பங்களாதேஷ், விஜிலென்ஸ் முஸ்லீம் ஜனதா பங்களாதேஷ், ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ், கிழக்கு வங்கக் கம்யூனிஸ்ட் கட்சி, இஸ்லாமிய மாணவர்கள் முகாம் போன்ற பெயர்களில் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட அமைப்புகளை முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தடை செய்த நிலையில், தற்போது இந்த தீவிரவாத அமைப்புகள் தலை தூக்கியதால், சட்டவிரோத ஆயுதங்களை ஒரு வாரத்தில் ஒப்படைக்க இடைக்கால அரசு கெடு விதித்துள்ளது. இருந்தும் வங்கதேச அரசியல் மாற்றங்களால், இந்திய எல்லையோர மாநிலங்களான வடகிழக்கு மாநிலங்களில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது’ என்று அவர்கள் கூறினர்.
The post பாகிஸ்தான் – வங்கதேச தீவிரவாத குழுக்கள் கைகோர்ப்பு: காஷ்மீரை போல் வடகிழக்கு மாநிலங்களில் அசாதாரண சூழல்? தடை செய்யப்பட்ட அமைப்புகள் மீண்டும் தலை தூக்கியதால் உஷார் appeared first on Dinakaran.