திருத்தணி அருகே விபத்தில் பலியான 5 மாணவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் மாலை சென்னை நோக்கி வேகமாக வந்த கார் மற்றும் சென்னையிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்த கனரக லாரி ராமஞ்சேரி பகுதியில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இதில் காரில் பயணம் செய்த 7 கல்லூரி மாணவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இதில் இருவர் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

போலீசாரின் விசாரணையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திர சேத்தன் (21), கிருஷ்ணா ரெட்டி மகன் ராம் மோகன் ரெட்டி (21), கிரண் என்பவரின் மகன் முகேஷ் (21), சீனிவாசன் மகன் நித்திஷ் (21), தெலங்கானாவைச் சேர்ந்த மதுகிருஷ்ணராஜ் மகன் நித்திஷ்வர்மா(21), கொண்டால் ராவ் மகன் சைத்தன்யகுமார் (21), சீனிவாசன் மகன் விஷ்ணு வர்தன் (21) ஆகிய 7 சனி மற்றும் ஞாயிறு கல்லூரிக்கு விடுமுறை என்பதால் வாடகைக்கு கார் எடுத்து திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் மாலை சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.

இதில் சேத்தன், ராமோகன் ரெட்டி, யுகேஷ், நிதீஷ், நித்திஷ் வர்மா ஆகிய 5 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது விசாரணையில் தெரிய வந்தது. படுகாயமடைந்த சைதன்யகுமார் மற்றும் விஷ்ணு வர்த்தன் ஆகிய இருவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் சம்பவம் நடைபெற்ற இரவே திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதனர். தொடர்ந்து நேற்று மாலை இறந்தவர்களின் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் சடலங்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

The post திருத்தணி அருகே விபத்தில் பலியான 5 மாணவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: