வயநாட்டில் தொடரும் சோகம்; பலியானவர்கள் எண்ணிக்கை 430ஆக உயர்வு: 13வது நாளாக இன்றும் தேடுதல் பணி தீவிரம்

திருவனந்தபுரம்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 430 ஆக உயர்ந்துள்ளது. 13வது நாளாக உடல்களை தேடும் பணி இன்று காலை தொடங்கியது. கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் 13 நாள் ஆகிறது. இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 430 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 70க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலச்சரிவில் உயிர் பிழைத்த 1900க்கும் மேற்பட்டோர் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நேற்று வயநாடு வந்தார். ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்த பின்னர் சூரல்மலை பகுதியில் நடந்து சென்றும் பார்த்தார். இதன்பின் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் மோடி கலந்து கொண்டார்.

இதற்கிடையே சூஜிப்பாறை அருவிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 4 உடல்களில் 3 உடல்கள் மீட்கப்பட்டன. அவை டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அடையாளம் காணப்படாத 3 உடல்கள் நேற்று புத்துமலையில் அடக்கம் செய்யப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கிய 126 பேரை காணவில்லை. இதனால் அவர்களது உடல்களை கண்டுபிடிப்பதற்காக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்தவர்களுடன் சேர்ந்து உடல்களை தேடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. பிரதமர் மோடி வருகை முன்னிட்டு நேற்று இந்தப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் உடல்களை தேடும் பணி தொடங்கியது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் உள்பட 1500க்கும் மேற்பட்டோர் 6 குழுக்களாக உடல்களை தேடி வருகின்றனர்.

 

The post வயநாட்டில் தொடரும் சோகம்; பலியானவர்கள் எண்ணிக்கை 430ஆக உயர்வு: 13வது நாளாக இன்றும் தேடுதல் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: