துபாய் ஸ்டார்ட்அப் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொழிலதிபர்கள் பாராட்டு

சென்னை: துபாயில் நடந்த ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலதிபர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது (Startup TN) இயங்கி வருகிறது. தமிழ்நாட்டினை புத்தொழில் நிறுவனங்களுக்கேற்ற சூழமைவு கொண்ட உலகின் சிறந்த இடங்களில் ஒன்றாக உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன், தொலைநோக்கு பார்வையோடு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

புத்தொழில் முனைவோர்களுக்கு நிதி உதவி, ஆலோசனைகள், உயர் திறன் தொழில் பயிற்சிகள் வழங்குதல், முதலீட்டாளர்கள் இணைப்பு, உலகளாவிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல் என பல தளங்களிலும் இயங்கி வருகின்றது. இந்நிலையில் துபாயில் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பு மையம், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் தொழில் முனைவோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் துவக்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் இங்குள்ள தமிழ் தொழில் அதிபர்கள் தமிழக அரசின் தொழில் தொடர்பான திட்டங்களில் பங்கேற்பது எளிமையாக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் ராஜாங்க அமைச்சர் அலியா அப்துல்லா அல் மஸ்ரூயி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துபாய் இந்திய துணை தூதர் சதீஷ்குமார் சிவன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் (எம்எஸ்எம்இ) துறையின் செயலாளர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தமிழக அதிகாரிகள் கொண்ட குழுவினர் தமிழக முதல்வரின் ஏற்பாட்டில் தமிழ்நாடு அரசு தொழில் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள் ஆபித் ஜுனைத், ஆடிட்டர் ராம், கமால், சீத்தாராமன், பிளாக்துளிப் இம்ரான், வால்வோபென்ஸ் ஹமீது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழக முதல்வரின் இந்த முயற்சியை வெளிநாட்டுவாழ் தொழிலதிபர்கள் வெகுவாக பாராட்டினர்.

The post துபாய் ஸ்டார்ட்அப் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொழிலதிபர்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: