புதுச்சேரியை புரட்டிப்போட்ட கனமழை: வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்

புதுச்சேரி: புதுச்சேரியை புரட்டிப்போடும் அளவுக்கு நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், வாய்க்காலில் வாலிபர் அடித்து செல்லப்பட்டார். புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

புதுவை சட்டசபை அருகே பெரிய வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. இந்நிலையில், ஜீவானந்தபுரம் பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்பகுதியை சேர்ந்த ஐயப்பன் (40), பாலா (40), சந்துரு (20) ஆகிய 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்துள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டூவீலரை பிடிக்க முயற்சி செய்தபோது மூவரும் இழுத்து செல்லப்பட்டனர்.

அப்பகுதியினர் பாலா, சந்துரு ஆகியோரை பத்திரமாக மீட்டனர். ஆனால் ஐயப்பன் அருகில் உள்ள ஓடை வாய்க்காலில் விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மாயமானார். கோரிமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து ஓடை வாய்க்காலில் இறங்கி ஐயப்பனை தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொக்கு பார்க் சிக்னல் அருகே மீண்டும் தேடும் பணி தொடர்கிறது. புதுவையில் நேற்றுமுன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை ஒரே நாளில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

The post புதுச்சேரியை புரட்டிப்போட்ட கனமழை: வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் appeared first on Dinakaran.

Related Stories: