83ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழினத்தை காக்கும் கொள்கை ஆயுதம் ‘முரசொலி’: திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: 83ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழினத்தை காக்கின்ற கொள்கை ஆயுதமான முரசொலியை அனைவரும் கையில் ஏந்துவோம் என தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: 1942 ஆகஸ்ட் 10ம் நாளன்று, காலங்காலமாக இந்த சமுதாயத்தில் நிலவி வந்த அடிமைத்தனத்தையும் மூடநம்பிக்கைகளையும் வெளியேற்றி சுயமரியாதையும் பகுத்தறிவும் மிக்க, மானமும் அறிவும் நிறைந்த, இன உணர்வுமிக்கதாக தமிழ்ச்சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் திராவிட கொள்கையினால் கூர்தீட்டப்பட்ட போர்வாளாக வெளியானது முரசொலி.

திருவாரூரில் அச்சிட்டு, ஓடம்போக்கி ஆற்று தண்ணீரை கடந்து அதனை ஊருக்குள் கொண்டு வருவதற்கு கலைஞரும் அவரின் அன்பு நண்பர் தென்னனும் எத்தனை பாடுபட்டார்கள் என்பதையும், முரசொலியை தொடர்ந்து நடத்துவதற்காக கலைஞர் தன் அருமை துணைவியாரின் நகைகளை அடமானம் வைத்து இடர்பாடுகளை எதிர்கொண்டதையும் நெஞ்சுக்கு நீதியின் முதல் பாகத்தினை படித்தால் தெளிவாக அறிந்திட முடியும். முதலில் துண்டறிக்கையாகவும், பின்னர் வார ஏடாகவும், அதன்பின் நாளேடாகவும் தன் மூத்த பிள்ளையான முரசொலியைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தெடுத்து, திராவிட இயக்கத்தின் கொள்கை முரசமாக மட்டுமின்றி, இதழியலில் ஒரு புரட்சியையே நடத்திக் காட்டியவர் கலைஞர்.

முரசொலியை வளர்த்தெடுப்பதில் கலைஞருக்கு உற்றதுணையாக இருந்ததில், அவருடைய மனசாட்சியாக திகழ்ந்து, முரசொலி என்பதையே தன் பெயரில் முதன்மையாகக் கொண்டவரான முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன். அவரது இளவல் முரசொலி செல்வத்துக்கும் பெரும் பங்கு உண்டு. இருவரும் அதன் ஆசிரியர்களாக இருந்து பல சோதனையான காலக்கட்டங்களிலும் முரசொலி தொய்வின்றி தொடரத் துணை நின்றது முரசொலியின் இதழியல் வரலாற்றுப் பக்கங்களில் நிறைந்திருக்கிறது.

கலைஞரின் மூத்த பிள்ளையாக இருந்தது முரசொலி. நான் எழுதுகிற இந்த ‘உங்களில் ஒருவன்’ கடிதத்தை உங்கள் கரங்களில் கொண்டு வந்து சேர்ப்பதும் கலைஞர் தாயாக இருந்து வளர்த்தெடுத்த மூத்த பிள்ளையும் என் மூத்த அண்ணனுமான முரசொலிதானே. முக்கால் நூற்றாண்டு கடந்து, பவள விழா ஆண்டில் வெற்றிநடை போடுகிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய இளைய தலைமுறையினர், திராவிட இயக்கத்தின் வரலாற்றையும், கழகத்தினர் கண்ட போராட்டக் களங்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும், அதனால் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களையும், கழக அரசின் சாதனைத் திட்டங்களையும் எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி முயற்சியில் நாள்தோறும் வெளியாகும் பாசறைப் பக்கம் கருத்துகளின் கருவூலமாகத் திகழ்கிறது.

83ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும், தமிழினத்தைக் காக்கின்ற கொள்கை ஆயுதமான முரசொலியைக் கலைஞரின் உடன்பிறப்புகளான நாம் அனைவரும் கையில் ஏந்துவோம். அதனைப் படிப்போம். அதிகளவில் பகிர்வோம் பரப்புவோம்! ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்று கலைஞர் பொறித்த பொன்னெழுத்துகளுக்கேற்ப, போர்க்குணம் மிக்க திராவிட வீரர்களாக நாம் ஜனநாயகக் களத்தில் தீரமுடன் செயல்படுவதற்கான கருத்தாயுதமாக திகழும் முரசொலியை வாழ்த்துவோம்.

The post 83ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழினத்தை காக்கும் கொள்கை ஆயுதம் ‘முரசொலி’: திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: