திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராம ஊராட்சிகளில் ஒரே நாளில் 5195 மேல்நீர்தேக்க தொட்டிகள் ஒட்டு மொத்த தூய்மை பணி

*அரசு செயலாளர் மற்றும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு பாராட்டு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், 860 கிராம ஊராட்சிகளில் உள்ள 5195 மேல்நீர் தேக்க தொட்டிகளை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் தூய்மை செய்து அசத்தியுள்ளனர்.மாநிலத்திலேயே அதிக கிராம ஊராட்சிகளை கொண்ட மாவட்டம் திருவண்ணாமலை. இந்த மாவட்டத்தில் 860 கிராம ஊராட்சிகள் உள்ளன. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள குடியிருப்புகளுக்கும், மேல்நீர்தேக்க தொட்டிகள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது பருவ மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் பரவலாக டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்ட முழுவதும் அதற்கான பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் நேரில் சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.

மேலும், குடிநீர் தொட்டிகளை பாதுகாப்பாக மூடி வைத்தல், பொது இடங்கள் மற்றும் குடியிருப்புகளை சுற்றியுள்ள பகுதிகளில் மழை தண்ணீர் தேங்காமல் தவிர்த்தல், டெங்கு கொசு புழு ஒழிப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 800 கிராம ஊராட்சிகளிலும் உள்ள 5195 மேல்நீர் தேக்க தொட்டிகளையும் தூய்மைப்படுத்தி, கிருமி நாசினிகள் தெளித்து பராமரிக்கும் பணி நேற்று ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் நடைபெற்றது.

மேலும், இந்த பணியை முறையாக மேற்கொண்டு அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ஊரக வளர்ச்சி துறை வாட்ஸ் அப் குழுவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். மேலும், இப்பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து மேநீர் தேக்க தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். ஒரு சில கிராம ஊராட்சிகளில், பொதுமக்களும் இந்த பணியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இந்நிலையில், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் கல்பூண்டி ஊராட்சியில், ஊராட்சி செயலாளர் சின்னராஜ் என்பவர், மேல்நீர் தொட்டிக்குள் இறங்கி முழு ஈடுபாட்டுடன் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட காட்சிகளை வாட்ஸ் அப் குழுவில் பார்வையிட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளரை பாராட்ட வேண்டும் என விரும்பினர். அதை ஒட்டி, கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலரான பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மதுமதி மற்றும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கல்பூண்டி ஊராட்சிக்கு நேரில் சென்றனர்.

தூய்மை செய்யப்பட்ட மேல்நீர் தேக்க தொட்டியை பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து, இப்பணியை முழு ஈடுபாட்டுடன் செய்த ஊராட்சி செயலாளர் சின்னராஜுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.மேலும், மாவட்டம் முழுவதும் மாதத்துக்கு இரண்டு முறை இது போன்ற ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வரும் 20ம் தேதி மீண்டும் அனைத்து மேநீர் தேக்க தொட்டிகளும் தூய்மைப்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராம ஊராட்சிகளில் ஒரே நாளில் 5195 மேல்நீர்தேக்க தொட்டிகள் ஒட்டு மொத்த தூய்மை பணி appeared first on Dinakaran.

Related Stories: