திருப்போரூர்-நெம்மேலி சாலையில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர்-நெம்மேலி சாலையில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழைய மாமல்லபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில் திருப்போரூர் – நெம்மேலி இடையே 3 கிமீ தூர சாலையும், பக்கிங்காம் கால்வாயில் பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையை பயன்படுத்தி திருப்போரூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு கானத்தூர், முட்டுக்காடு, கரிக்காட்டுக்குப்பம், குன்றுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, திருவிடந்தை, தெற்குப்பட்டு, வடநெம்மேலி, புதிய கல்பாக்கம், நெம்மேலி, சூளேரிக்காடு, கிருஷ்ணன் காரணை, பட்டிபுலம், சாலவான் குப்பம் உள்ளிட்ட கடற்கரையை ஒட்டிய கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.

அதேபோன்று திருப்போரூர், ஆலத்தூர், தண்டலம், செம்பாக்கம், மடையத்தூர், கொட்டமேடு, மயிலை, கரும்பாக்கம், முள்ளிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நெம்மேலியில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரிக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். இதுமட்டும் இன்றி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவ மக்கள் தங்களின் மீன், கருவாடு, இறால் போன்றவற்றை இந்த சாலை வழியாகத்தான் திருப்போரூரில் உள்ள சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக இந்த சாலையின் இருபுறமும் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் புதர்ச்செடிகள் வளர்ந்துள்ளன. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரசி விபத்தை ஏற்படுத்துகின்றன. சாலையை பராமரிக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை பாரா முகத்தோடு இருப்பதால் சீமைக் கருவேல மரங்கள் பெரிய அளவில் வளர்ந்து விட்டன.

இதனால், பக்கிங்காம் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள பாலமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, திருப்போரூர் மற்றும் நெம்மேலி இடையே நெடுஞ்சாலையில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் முன் வர வேண்டும் எனவும், அச்சாலையில் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் பாதிக்காத வகையில் நிழல் தரும் மரங்களை நட வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருப்போரூர்-நெம்மேலி சாலையில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: