கல்பாக்கம் அருகே பரபரப்பு ரேஷன் கடைக்கு செல்லும் பாதையில் முள்வேலி: கிராம மக்கள் சாலை மறியல்

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே ரேஷன் கடைக்கு செல்லும் பாதையில் முள்வேலி அமைத்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கல்பாக்கம் அடுத்த பைராகிமடம் – அங்கமாம்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்குள்ள ரேசன் கடையில் தங்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன் என்பவர் ரேஷன் கடைக்குச் செல்லும் பாதை தனக்கு சொந்தமானது என்று கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஷன் கடைக்கு செல்லும் சாலையை அடைத்து முள்வேலி அமைத்துள்ளார். இதனால், பொதுமக்கள் ரேஷன் கடைக்கும், மாணவ-மாணவிகள் பள்ளிக்கும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, அந்த முள்வேலியை அகற்ற வேண்டும் என்று வருவாய்த்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் இதனை கண்டித்து நேற்று காலை 100க்கும் மேற்பட்டோர் அங்குள்ள கல்பாக்கம் – திருக்கழுக்குன்றம் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் ஓரிரு நாட்களில் பேசி உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கவுன்சிலர் சகாதேவனிடம் கேட்டபோது, முள்வேலி அமைத்துள்ள அந்த இடம் எங்களது பட்டா இடம். அதனால்தான் முள்வேலி அமைத்தேன்’ என்றார்.

The post கல்பாக்கம் அருகே பரபரப்பு ரேஷன் கடைக்கு செல்லும் பாதையில் முள்வேலி: கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: