வக்புவாரிய சட்டத்திருத்த மசோதா; ஒன்றிய அரசு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் கடும் விவாதம்

புதுடெல்லி: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வர முடிவு எடுத்துள்ள ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ அரசு வக்பு வாரியத்தின் அதிகாரங்களை குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் வக்பு வாரியத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா சமூகத்தில் பிளவை உருவாக்கும் வகையில் பாஜ தலைமையிலான அரசு கொண்டு வர விரும்புவதாக பல எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

ஐயுஎம்எல் எம்பி முகமது பஷீர், ‘ ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை தவறான நோக்கம் கொண்டது. வக்பு வாரிய சொத்துக்களை பா.ஜ கைப்பற்ற விரும்புகிறது. அப்படி ஒரு சட்டம் வந்தால், நாங்கள் அதை கடுமையாக எதிர்ப்போம். ஒத்த கருத்துடைய கட்சிகளுடனும் பேசுவோம்’ என்றார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில்,’ இந்து, முஸ்லிம்களை பிரித்து, முஸ்லிம் சகோதரர்களின் உரிமைகளைப் பறிப்பதும், அரசியல் சாசனத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கும் விதத்திலும் செயல்படுவதும்தான் பாஜவின் ஒரே வேலை’ என்றார்.

சிவசேனா (யுபிடி) எம்பி பிரியங்கா சதுர்வேதி, ‘பாஜ தலைமையிலான அரசு பட்ஜெட் மீதான விவாதத்தில் இருந்து தப்பிக்க வக்பு வாரிய பிரச்னையை கையில் எடுத்துள்ளனர். ’ என்றார். மார்க்சிஸ்ட் எம்பி அம்ரா ராம் கூறுகையில்,’பா.ஜ பிரிவினைவாத அரசியலை நம்புகிறது. வக்பு வாரியங்களை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றில் தலையிட முயற்சி செய்கிறது. இதை நாங்கள் கண்டிக்கிறோம் என்றார். இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு தெரிவித்துள்ளது.

The post வக்புவாரிய சட்டத்திருத்த மசோதா; ஒன்றிய அரசு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் கடும் விவாதம் appeared first on Dinakaran.

Related Stories: