சென்னை மாநகராட்சியில் தொடர் புகார்களுக்கு உள்ளான 4 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் : நகராட்சி நிர்வாகத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சியில் தொடர் புகார்களுக்கு உள்ளான 4 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நகராட்சி நிர்வாகத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் பணிகள், மின் கேபிள் பதிப்பு போன்ற திட்டப் பணிகளும், குடிநீர் – கழிவுநீர் திட்ட பணிகள் என பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இது போன்ற பணிகளை சரியாக மேற்பார்வையிடாதது, மக்கள் புகார்களை அலட்சியப்படுத்துவது, ஒப்பந்ததாரர்களிடம் பணம் கேட்டு மிரட்டியது, அதிகாரிகளை தரக்குறைவாக பேசுவது ஆகிய பல்வேறு புகார்கள் கவுன்சிலர்கள் மீது குவிந்த வண்ணம் உள்ளன.

இது போன்ற புகார்கள் மீது சிறப்பு நுண்ணறிவு போலீசார் மூலம் புகார் தொடர்பாக உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 4 கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாதவரம், அம்பத்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ரமா மண்டலங்களில் உள்ள 4 கவுன்சிலர்களுக்கு உள்ளாட்சி அமைப்பு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுக கவுன்சிலர்கள் தி.கார்த்திகேயன், வ.பாபு, க.ஏகாம்பரம், அதிமுக கவுன்சிலர் டி.சி.கோவிந்தசாமி ஆகிய 4 பேருக்கு நகராட்சி நிர்வாகத்துறை நோட்டீஸ் அனுப்பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. புகார்களின் அடிப்படையில் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என 4 கவுன்சிலர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. புகார்கள் உறுதி செய்யப்பட்டால், உரிய சட்ட நடவடிக்கை அல்லது புகாருக்குள்ளான 4 கவுன்சிலர்கள் தகுதி நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

The post சென்னை மாநகராட்சியில் தொடர் புகார்களுக்கு உள்ளான 4 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் : நகராட்சி நிர்வாகத்துறை அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: