இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகமும் மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் ஆதிசக்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அதிகாலை முதல் காட்சி அளித்தார்.
இதனை தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசல் வழியாக உற்சவர் அம்மனை பம்பை மேளதாளம் முழங்க பூசாரிகள் தோளில் சுமந்து ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. இருந்தபோதிலும் அதனை பொருட்படுத்தாத பக்தர்கள் குடைபிடித்தபடியே ஊஞ்சலில் அருள்பாலித்த அம்மனை தரிசித்தனர். மழை காரணமாக ஊஞ்சல் சேவை 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்மன் கோயில் உட்பிரகாரத்திற்கு பூசாரிகள் அழைத்து சென்றனர். பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் மழையில் நனைந்தபடியே ஊஞ்சல் மண்டபம் எதிரே காத்திருந்து அம்மனை மனம் உருகி வேண்டினர்.
நேற்று இரவு மேல்மலையனூர் பகுதியில் தொடர்ந்து 5 மணி நேரம் பெய்த கன மழையின் காரணமாக ஊஞ்சல் உற்சவம் முடிந்து வெளியே வந்த பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்த முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் கோயிலுக்கு செல்லும் முக்கிய பாதையில் மக்கள் கூட்டதில் சிக்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
The post ஆடி அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் appeared first on Dinakaran.