திருப்பூர் , ஆக.5: திருப்பூரில் தமிழ்நாடு முதலமைச்சரின் உதவித்தொகை திறனாய்வு தேர்வினை 2,720 மாணவ மாணவியர் எழுதினர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பில் மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 2023-24 ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று தற்போது 2024-25ஆம் கல்வி ஆண்டில் 11ம் வகுப்பினை அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் இதில் கலந்து கொள்ள பள்ளி வாரியாக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் தகுதியான மாணவ மாணவியர்களுக்கான திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது. திருப்பூர் மாநகரில் 4 அரசு பள்ளிகள் உட்பட மாவட்டம் முழுவதும் 11 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 3,198 மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்றைய தினம் 2,720 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். 478 பேர் தேர்வு எழுத வரவில்லை. 9 மற்றும் 10ம் வகுப்பு பாடப் பிரிவுகளில் இருந்து கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவ மாணவிகள் பதில் எழுதினார்.
காலை 10 மணி முதல் 2 மணி வரை முதல் தாளுக்கான தேர்வும் , மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மற்றொரு தாளுக்கான தேர்வும் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் 1000 ரூபாய் என ஒரு கல்வியாண்டிற்கு 10 ஆயிரம் ரூபாய் என இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்பட உள்ளது. திருப்பூர் கே எஸ் சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
The post தமிழ்நாடு முதலமைச்சரின் உதவித்தொகை திறனாய்வு தேர்வு appeared first on Dinakaran.