திருப்பூர், செப். 7: திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொருட்களை வாங்க கடை வீதியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முழு முதற் கடவுளான விநாயகருக்கு கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இந்துக்களிடையே பிரசித்தி பெற்ற விழாவாக இருந்து வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளில் அரை அடி முதல் 3 அடி வரையிலான விநாயகர் சிலைகளை வாங்கி விநாயகர் சதுர்த்தி அன்று பூஜைகள் செய்து கொழுக்கட்டை, அவல், பொங்கல் படைத்து வழிபடுவது வழக்கம். முதல் நாள் அல்லது 3வது நாள் விநாயகர் சிலைகளை அருகில் உள்ள கிணறு அல்லது குளக்கரையில் கரைப்பது வழக்கம்.
இந்நிலையில், இந்து அமைப்புகள் சார்பில் மாநகர மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 3 முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகளை வைத்து 2 முதல் 5 நாட்கள் வரை வழிபாடு நடத்தி பின்பு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ள குளம் மற்றும் வாய்க்கால்களில் கரைக்க உள்ளனர். இதனை முன்னிட்டு கடைவீதியில் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். தென்னம்பாளையம் சந்தையில் பூசணிக்காய் வரத்து அதிகமாக கொண்டு வரப்பட்டிருந்தது. கிலோ ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், அரிசி கடைவீதியில் உள்ள பூ மார்க்கெட்டில் பூ விற்பனையும் களை கட்டியது. தென்னங்குருத்தால் செய்யப்பட்ட அலங்கார தோரணங்கள் ரூ.20 முதல் விற்பனை செய்யப்பட்டது.
சிறிய அளவிலான விநாயகர் முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளுக்கு வைக்கக்கூடிய அலங்கார குடைகள் ரூ.40 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் விநாயகருக்கு சூட்டக்கூடிய சிறப்பு வாய்ந்த வெள்ளை எருக்கம் பூ மாலை ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. எலுமிச்சை பழம் கிலோ ரூ.200 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது. வாழை இலை, வாழைப்பழம், வெற்றிலை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இதனால், பூ மார்க்கெட் வீதி, தென்னம்பாளையம் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் அரிசி கடை வீதி, காமராஜ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
The post விநாயகர் சதுர்த்தியையொட்டி பொருட்களை வாங்க கடை வீதிகளில் குவிந்த பொதுமக்கள் appeared first on Dinakaran.