×

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணிக்கு 1200 போலீசார் வருகை

திருப்பூர், செப். 7: விநாயகர் சதுரத்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறியது முதல் பெரிய வடிவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுகின்றனர். இதுபோல், இந்து அமைப்புகள் 3 முதல் 10 அடிவரையிலான சிலைகளை கோயில்கள் மற்றும் பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். இதற்காக திருப்பூர் மாநகரில் 660 சிலைகள் இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதற்கான இடங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு போலீசாரும் அந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டு இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான தாராபுரம், உடுமலை, அவிநாசி, மடத்துக்குளம், காங்கேயம், வெள்ளகோவில், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் 1300 சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்ய இந்து அமைப்புகள் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. மேலும், 1100 முதல் 1200 சிலைகள் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக மாவட்ட போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு ரோந்து பணியையும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

The post திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணிக்கு 1200 போலீசார் வருகை appeared first on Dinakaran.

Tags : Vinayagar Chaturthi Festival ,Tiruppur ,
× RELATED விதிமீறிய டிராக்டர்கள் பறிமுதல்