திருப்பதியில் இம்மாதம் 2 முறை கருட வாகன சேவை: வரும் 9, 19ம் தேதிகளில் நடக்கிறது

திருமலை: திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் 9, 19ம் தேதிகளில் 2 முறை கருட வாகன சேவைகள் நடக்கிறது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் 9ம் தேதி கருடபஞ்சமி மற்றும் 19ம் தேதி ஆவணி மாத பவுர்ணமியையொட்டி மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் கருட வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதன்படி, 9ம் தேதி கருடபஞ்சமி விழாவையொட்டி, திருமலையில் உள்ள மலையப்ப சுவாமி இரவு 7 மணி முதல் 9 மணி வரை தனது இஷ்ட வாகனமான கருடன் மீது திருமாட வீதிகளில் அருள்பாலிக்கிறார். இதில் புதுமணத் தம்பதிகள் ‘கருடபஞ்சமி’ பூஜை செய்தால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதோடு, கருடனைப் போல வலிமையான மற்றும் நல்ல ஆளுமையுடன் இருக்கும் குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், 19ம் தேதி ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். ஒரே மாதத்தில் இரண்டு முறை கருட வாகன சேவை நடைபெற உள்ளதால் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற வேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பதியில் இம்மாதம் 2 முறை கருட வாகன சேவை: வரும் 9, 19ம் தேதிகளில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: