ஆர்.எஸ்.மங்கலம், ஆக.4: ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ஆடி 18 பெருக்கு விழாவை முன்னிட்டு கண்மாய், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில், பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
தமிழ்நாட்டில் பாரம்பரியமாக ஆடி 18 விழாவை சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். இப்பொழுது நெல், கரும்பு உள்ளிட்டவற்றை விதைத்தால் தான், அதனை தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் கூறப்படுகிறது.ஆடி பெருக்கு நாளன்று மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். அதன் பின்னர் கோயில்களில் சென்று வழிப்படவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர்.
வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு உதவிடும் நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.
அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பலவிதமான கலப்பு சாதங்கள் தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட சாதங்களை தயார் செய்து அதை ஏதாவது ஒரு ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை உண்டு மகிழ்வார்கள். ஆனால் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ஆறுகள் அதிகம் இல்லாததாலும் ஆற்று பகுதிகளில் நீரின்றி வறண்டு காணப்படுவதாலும் இப்பகுதியில் உள்ள கண்மாய், குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு செய்து மகிழ்ந்தனர். அதேபோல் பெண்கள் மஞ்சள் கயிறுகளை தாலி பெருக்கி கட்டிக் கொண்டனர். மேலும் சிலர் கடந்த சித்திரை மாதம் 1ம் தேதி விதை போடாத விவசாயிகள் நேற்று ஆடி 18 முன்னிட்டு தங்களது விளை நிலங்களில் விதையிட்டு வழிபாடு செய்தனர்.
The post ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ஆடி பெருக்கு கொண்டாட்டம் appeared first on Dinakaran.