சென்னையில் ரூ.10.85 கோடியில் புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ரூ.10.85 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வண்ண விளக்குகள் ஒளிர அழகுபடுத்தப்பட்டுள்ள சென்னை அண்ணா மேம்பாலம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (2.8.2024) சென்னையில், 1973-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தின் பொன்விழாவையொட்டி, 10 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வண்ண விளக்குகள் ஒளிர அழகுபடுத்தப்பட்டுள்ள அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் முதல் சாலை மேம்பாலமான அண்ணா மேம்பாலம் உட்பட சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகப் பல மேம்பாலங்களைக் கட்டிய பெருமை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையே சாரும்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1969இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பின்னால் திட்டமிட்டு வடிவமைத்துக் கட்டப்பட்ட மிகப்பெரிய மேம்பாலம் அண்ணா மேம்பாலம். 1970 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநகரில் ஜெமினி ஸ்டுடியோ அமைந்திருந்த அந்தப் பகுதியில் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை, இராதாகிருஷ்ணன் சாலை, தேனாம்பேட்டை சாலை, ஜி.என். செட்டி சாலை ஆகிய சாலைகள் சந்திக்கும் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அந்தநெரிசலை நீக்கி அப்பகுதியில் தடையில்லாத சாலைப் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1.7.1973 அன்று திறந்து வைக்கப்பட்டது

பொதுவாக ஆறுகள், தாழ்வான பகுதிகள், இரயில் தண்டவாளங்கள் போன்ற பகுதிகளைக் கடப்பதற்குத்தான் மேம்பாலங்கள் கட்டப்படுவது வழக்கமாகும். ஆனால், சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை மட்டுமே கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சாலை சந்திப்பில் முதன் முதலாகக் கட்டப்பட்ட மேம்பாலம் இது. ஜெமினி ஸ்டுடியோ அப்பகுதியில் அமைந்திருந்ததையொட்டி அப்பாலத்தைக் குறிப்பிடும்போது, “ஜெமினி மேம்பாலம்” என்று முதலில் அப்பாலம் கூறப்பட்டது.

ஆயினும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்களைப் போற்றும் தம் நெறிகளில் ஒன்றாக – அன்றைய நிலையில் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய மேம்பாலமாகத் தாம் கட்டிய இந்தப் பாலத்திற்கு “அண்ணா மேம்பாலம்” எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

சென்னை மாநகருக்கு வெளியூர்களில் இருந்து வருகை தருவோரும், சென்னை மாநகர மக்களும் இந்தப் பாலத்தைக் கடந்து செல்லும்போது வாகன நெரிசல்கள் இன்றி, விரைவாக செல்வதை இன்றும் நாம் காண முடிகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா காணும் நிலையில் அதனைப் புதுப்பித்திட தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 8.85 கோடி ஒதுக்கீடு செய்தார்கள்.

மேலும், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2 கோடி பெறப்பட்டது. மொத்தம் 10 கோடியே 85 இலட்சம் ரூபாய்ச் செலவில் சென்னை அண்ணா மேம்பாலம் புதுப்பிக்கப்பட்டு வண்ண விளக்குகள் ஒளிர அழகுபடுத்தப்பட்டுள்ளது.

இதில் பாலத்தின் தூண்கள் GRC பேனல்கள் கொண்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் கீழ் அழகூட்டும் வகையில் பசுமையான செடிகள் ஒளிரும் மின்விளக்குகள், மக்கள் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதை, செயற்கை நீருற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.மேலும், திராவிட கட்டடக் கலையைப் பறைசாற்றும் வகையில் பாலத்தின் முகப்பில் உள்ள தூண்கள், பூங்கா பகுதியில் யாழி சிற்பங்கள், முக்கோண ஸ்தூபிகள், பித்தளைப் பலகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன. பொன்விழா புனரமைக்கப்பட்டுள்ள ஆண்டை முன்னிட்டு புதுப்பொலிவுடன் அண்ணா மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா. பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக் குழு தலைவர் நே. சிற்றரசு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலாளர் டாக்டர் ஆர். செல்வராஜ், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னையில் ரூ.10.85 கோடியில் புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: