வளம் அருளும் காவிரியே வாழி நீ!

தென்மேற்கு மழைப் பருவத்தில் நீர்பிடிப்பு இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். இதனை ஆற்றுப் பெருக்கு எனக்கூறுவர். இந்த இயற்கையின் கருணை ஆடி மாதத்தில் நிகழ்வதால், ஆடிப் பெருக்கு என்பர். விவசாயப் பெருமக்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் ‘ஆடிப் பட்டம் தேடி விதைப்பர்’. இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றைப் பயிரிட்டால் தை மாதத்தில் அறுவடை செய்யமுடியும். இந்த செல்வச் செழிப்புக்கு ஆதாரமான நதிகளைப் போற்றும்வகையில், ஆற்றங்கரைகளில் கூடி, பெருகிவரும் ஆற்றுக்கு பூஜை செய்து மகிழ்வர். இதேநாளில் கோயில்களிலும் வழிபடுவர். அன்றைய தினத்தில், பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் இடத்தை சுத்தம் செய்து, பசும் சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன்முன் அகல்விளக்கு ஏற்றி வைப்பர். வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, ஊதுபத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு வழிகாட்டுமாறு வேண்டுகின்றனர். வாழை மட்டையில் விளக்கு ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்வதால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.

தங்கள் வீட்டில் தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் என்று கலந்த சாதம் தயாரித்துக் கொண்டுவந்து ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள். ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவமழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும். காவிரி, தமிழ்நாட்டு எல்லையான ஒகேனக்கல்லில் நுழைந்து, கடலில் கலக்கும் பூம்புகார் வரையிலும் வாழும் மக்களால் கொண்டாடப்படும் பெருந்திருவிழா, ஆடிப் பெருக்கு. இந்தவகையில் மேட்டூர் அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, பரமத்திவேலூர், குளித்தலை, திருச்சி, பூம்புகார் முதலான இடங்களில் காவிரியை மக்கள் சிறப்பித்துக் கொண்டாடுகிறார்கள். திருவரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப் பெருக்கு நாளன்று திருவரங்கம் கோயிலிலிருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலைவரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார்.பெருமாளின் சீதனமாக தாலிப் பொட்டு, பட்டு மற்றும் மங்கலப் பொருட்கள் ஆற்றில் விடப்படும். நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப் பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி, அரப்பளீஸ்வரரை தொழுவது வழக்கம். பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரியில் மட்டுமாவது அணைகளைத் திறந்துவிட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர். காவிரித்தாயை வணங்குவோம், இனியாவது நீர் பெருகி நலம் பெருக்குமாறு இறைஞ்சி இயற்கை அன்னையை
வேண்டிக் கொள்வோம்.

 

The post வளம் அருளும் காவிரியே வாழி நீ! appeared first on Dinakaran.

Related Stories: