வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 100 வீடுகள்.. மீண்டும் அதே பகுதியில் குடியேற வலியுறுத்தக் கூடாது : ராகுல் காந்தி பேட்டி

வயநாடு: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 100க்கும் மேற்பட்ட வீடுகளை காங்கிரஸ் கட்டித் தரும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள், நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலச்சரிவில் சிக்கி, இதுவரை சுமார் 333 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். இந்நிலையில், 2வது நாளாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர், நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டனர்.

பின்னர் வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “கேரள மாநிலம் வயநாட்டில் மிகவும் மோசமான பேரிடர் ஏற்பட்டுள்ளது.இன்று பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம். எதிர்பார்க்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்கள் எங்களிடம் கூறினர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தர காங்கிரஸ் குடும்பம் உறுதியளிக்கிறது.இதுபோன்ற மோசமான நிலையை கேரளா இதுவரை பார்த்தது இல்லை.

முகாம்களில் இருப்பவர்களுக்குத் தேவையான வசதிகளை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானவற்றை மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அதே பகுதியில் குடியேற வலியுறுத்தக் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் எங்கு குடியேற விரும்புகிறார்களோ அங்கு அவர்களை குடியேற அரசு அனுமதிக்க வேண்டும். வயநாடு நிலச்சரிவு விவகாரத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளோம். வயநாடு நிலச்சரிவு குறித்து மக்களவையில் குரல் எழுப்புவோம்,”என தெரிவித்தார்.

The post வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 100 வீடுகள்.. மீண்டும் அதே பகுதியில் குடியேற வலியுறுத்தக் கூடாது : ராகுல் காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: