காசா மீதான தாக்குதலுக்கு பதிலடி இஸ்ரேல் நிலைகள் மீது 70 ராக்கெட் வீச்சு: களத்தில் இறங்கியது ஹிஸ்புல்லா

பெய்ரூட்: காசா மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது 70 ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா அமைப்பு வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே நடக்கும் போரில், காசா நகரின் மீது இஸ்ரேல் இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. அதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட ராணுவத் தளபதி ஃபுவாட் ஷோகோரை இஸ்ரேல் கொன்றதையடுத்து, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் மீது உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தார். இந்நிலையில் தெற்கு லெபனான் மீதான இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதால், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை ஹிஸ்புல்லா நடத்தி உள்ளது.

மேற்கு கலிலியில் இஸ்ரேலின் ராணுவ நிலைகளின் மீது ஹிஸ்புல்லா ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே லெபனான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் மீது ஏவப்பட்ட சுமார் 70 ராக்கெட்டுகளை கண்காணித்ததாகவும், அவற்றில் சிலவற்றை இஸ்ரேலிய அயர்ன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இடைமறித்ததாகவும் தெரிவித்தன. அதேநேரம் இஸ்ரேல் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட அறிவிப்பில், மேற்கு கலிலியை நோக்கி ஏவப்பட்ட ராக்கெட்டுகளில், 15 இடைமறித்ேதாம். மீதமுள்ள ராக்கெட்டுகள் வெற்றுப் பகுதிகளில் விழுந்தன என்றும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

 

The post காசா மீதான தாக்குதலுக்கு பதிலடி இஸ்ரேல் நிலைகள் மீது 70 ராக்கெட் வீச்சு: களத்தில் இறங்கியது ஹிஸ்புல்லா appeared first on Dinakaran.

Related Stories: