ஆதிபட்டதளச்சி அம்மன் கோயில் திருவிழா கருப்பசாமிக்கு எரிசோறு, அடசல் பூஜை

தோகைமலை, ஆக 2: தோகைமலை அருகே பில்லூரில் பிரசித்தி பெற்ற ஆதிபட்டதளச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கருப்பசாமிக்கு எரிசோறு வழங்கி அடசல் பூஜை நடத்தினர். தோகைமலை அருகே பில்லூரில் பில்லூர்நாடு பொன்னம்பலக்கரை வகையறா பங்காளிகளின் குல தெய்வங்களான ஆதிபட்டதளச்சி அம்மன், மதுரைவீரன், கன்னிமார், முனியப்பன், கருப்பசாமி, வெள்ளையம்மாள், பாப்பாத்தியம்மாள், வடுவச்சி அம்மன், வீரக்காள், பொம்மியம்மாள், பட்டவன் சுவாமிகள், 21 பந்தி தெய்வங்களுக்கு தனித்தனியாக கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. இதில் முதல் நாள் திருச்சி காவிரி நதியில் பங்காளிகள் அனைவரும் புனித நீராடிய பின்பு புண்ணிய தீர்த்தம் எடுத்தனர்.

2ம் நாள் அன்று மாலை கருப்பசாமிக்கு பங்காளிகள் குடும்பங்கள் அனைவரும் பொங்கல் வைத்து கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் செய்தனர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு கருப்பசாமிக்கு எரிசோறு வழங்கி அடசல் பூஜை செய்தனர். தொடர்ந்து 5 நாள் திருவிழாவை முடித்து வைத்தனர். இதில் பில்லூர், பெரியவீட்டுக்காரன்பட்டி, தாதம்பட்டி, முத்தக்கவுண்டம்பட்டி, வையமலைபாளையம், பூசாரிப்பட்டி, கஸ்தூரிகுரும்பபட்டி, செங்காட்டுப்பட்டி, முள்ளிப்பாடி, தாளக்குளத்துப்பட்டி, தங்கம்மாபட்டி, கே.புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள பில்லூர்நாடு பொன்னம்பலக்கரை வகையறா பங்காளிகள் கலந்து கொண்டனர்.

The post ஆதிபட்டதளச்சி அம்மன் கோயில் திருவிழா கருப்பசாமிக்கு எரிசோறு, அடசல் பூஜை appeared first on Dinakaran.

Related Stories: